spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மருதாணியும் பாட்டி வைத்தியமும்!

மருதாணியும் பாட்டி வைத்தியமும்!

- Advertisement -
maruthani vaidhyam
maruthani vaidhyam

கொரோனா பயத்தில் தலைக்கு ‘கேப்’, முகத்தில் முகமூடி, பாதிரியார் போன்ற நீண்ட அங்கி (எனக்கு நீலக்கலரில்), கையில் கிளவ், முகத்தைக் காக்க ஒரு பிளாஸ்டிக் ஷீல்டு – நிலவில் நடப்பது போல நடை (இதற்கும் புவி ஈர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை – எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸின் எடை, நடையை மாற்றியது!)- மிகுந்த சிரமத்திற்குப் பிறகு என் சீட்டில் அமர்ந்து கொண்டு, ‘அடுத்த பேஷண்ட்’ என்றேன்.

மனைவியுடன் வந்து அமர்ந்தவருக்கு எழுபது வயதிருக்கலாம். மீசையின்றி, ‘பளிச்’ சென்று சிரித்த முகம்; நெற்றியில் சின்ன கீற்று சந்தனம், பட்டும் படாமலும் குங்குமம் – வயதுசார்ந்த சின்ன கம்ப்ளைண்ட்தான்.

maruthani
maruthani

ஆனால் என்னைக் கவர்ந்தது, அவரது கையில் வட்டமாக, ஆரஞ்சு நிறத்தில் பற்றியிருந்த மருதாணியின் நிறம். பொதுவாக ஆண்கள் மருதாணி இட்டுக்கொள்வது அபூர்வம் – ஏதாவது விசேஷம் – திருமணம், சீமந்தம் – என்றால், போனால் போகிறது என்று ஆணுக்கும் இட்டு விடுவார்கள் வீட்டில் உள்ள பொண்டுகள்! இவருக்குப் போன வாரம்தான் பீமரத சாந்தி – அதனால் கையில் மருதாணி!

‘அழகாயிருக்கிறது; இப்போதெல்லாம் யார் மருதாணி அரைத்து இட்டுக்கொள்கிறார்கள்?’ என்றேன் குரலில் ஆதங்கத்துடன்! புன்னகைத்தபடி (ஒரு நளினமான பெண்ணின் புன்னகை மாதிரி எனக்குத் தோன்றியது மருதாணியாலா?) தன் மனைவியைப் பார்த்தார். உண்மையான வெட்கத்துடன், புன்னகைத்தபடி, “அவர் வேண்டாம் என்றார். நாங்கள்தான் (வீட்டில் இருந்த பெரிய,சிறிய பெண்கள்) கம்பெல் பண்ணி இட்டுவிட்டோம்” என்றார் அவர் மனைவி! அவர் கையிலும் மருதாணி – உள்ளங்கை நடுவில் ஒரு வட்டம், சுற்றி நான்கைந்து புள்ளிகள், விரல்களின் முதல் கணு வரையிலும் ஆரஞ்சு மெரூன் கலரில் – அழகாய் இருந்தது.

மயில்கண் வேஷ்டியும், புது மோதிரமும், முக்கால் கை மடித்துவிடப்பட்ட புதுச் சட்டையும் (காலரில் குங்குமம்), கழுத்தில் மைனர் செயினும் இருந்தாலும், கையில் சிவந்திருக்கும் மருதாணியே புது மாப்பிள்ளையை அடையாளப் படுத்தியது அந்தக் காலத்தில்!

சிதம்பரம் வீட்டில், கொல்லைப் புறத்திலேயே மருதாணிச் செடி – இரண்டு மாதத்திற்கொரு முறை, ஒரு மாலையில் இலைகளை உருவி, சிறிது தண்ணீர் விட்டு, அம்மியில் (?கல்லோரலிலும்) மைய அரைத்து (பாக்கு, புளி சேர்ப்பார்கள் என்ற ஞாபகம்), ஒரு எவர்சில்வர் கிண்ணத்தில் வைத்து விடுவார்கள். (பதம் முக்கியம் – திப்பிதிப்பியாக தேங்காய்த் துவையல் போலிருந்தால் கையில் நினைத்த உருவில் ஒட்டுவது சிரமம்!).

பெண்கள் நிறைந்திருந்த வீட்டில் – பாட்டி, மன்னிகள், சித்திகள், குடித்தனம் இருந்த மாமி, வீட்டுப் பெண் குழந்தைகள் என அனைவருக்கும் வீட்டு முற்றத்தில், நிலா ஒளியில் மருதாணி இடும் சடங்கு நடைபெறும். “எனக்கு இரண்டு கையும்”, “விரலில் கொப்பி வேண்டாம்”, “வட்டமாக”, ‘முழு உள்ளங்கையும்”, “நாலு மூலையிலும் பொட்டு” – அவரவர் விருப்பத்திற்குப் பாட்டி பொறுமையாய் மருதாணியை இடும் அழகைச் சொல்லி மாளாது!

இதற்காக, இரவுச் சாப்பாடு, சீக்கிரமாக முடிக்கப் படும். படுக்கைகள் தயார் நிலையில் விரித்து வைக்கப்படும். தலைகாணிகள் பழைய துண்டுகளால் மூடப்படும். சோதனையாக, மருதாணி இட்டவுடன், தலை அரிக்கும், முதுகு அரிக்கும், தண்ணீர் தாகமெடுக்கும், படுத்த பின்பு, போர்வை போர்த்திவிட வேண்டும் – இதற்காக ஒருவர் காத்திருந்து கடைசியில் மருதாணி இட்டுக்கொள்வார் – பாட்டியோ, பெரிய மன்னியோ – எல்லாம் முடிந்து, தானே கொஞ்சம் மருதாணியை கைகளில் ஈஷிக்கொண்டு படுப்பார்கள். சின்ன வயதில் இது ஒரு பெரிய தியாகமாக எனக்குத் தோன்றும் – கூட்டுக்குடும்பங்களில்தான் இப்படிப்பட்ட பாசமும், நேசமும், விட்டுக்கொடுத்தலும் சாத்தியம்! மறக்க முடியாத மருதாணி வைபவங்கள்!

மறுநாள் காலை, படுக்கையெங்கும் சிதறிக்கிடக்கும் காய்ந்த மருதாணி துகள்கள் – அதற்கென்ற பிரத்தியேக வாசனை – படுக்கையை உதறி, பெருக்கிப் போடும்வரை மூக்கில் சுற்றி வரும்! மீதி ஒட்டியிருக்கும் மருதாணியைப் பிய்த்துவிட்டு, தண்ணீரில் கை கழுவிப் பார்த்தால், கைகளின் மோஸ்தரே மாறி, களையாயிருக்கும்! நிறத்துக்கேற்ப, ‘உனக்கு உடம்பு ரொம்ப சூடு”, “தூக்கத்துல அழிச்சி விட்டுட்டே”, ‘உன் வீட்டுக்காரன் உங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பான்” போன்ற கமெண்டுகள் காலையைக் கலகலக்கும்! கைகள் போலவே கால்களுக்கும் உண்டு – ஆனாலும் கவனிப்பு கம்மிதான்!

dr j baskar
dr j baskar

வருடம் முழுவதும் மருதாணியின் நிறம் கைகளில் இருக்கும். நகங்கள் வளர, வளர பாதி வெள்ளையும், பாதி ஆரஞ்சுமாக இருக்கும். முழுவதுமாக ஆரஞ்சு மறையும் முன், மீண்டும் மருதாணி இடப்படும்! பாட்டி சொல்லுவாள்: “ஒடம்புக்குக் குளிர்ச்சி. கை காலெல்லாம் காய்ந்து வெள்ளை படியாது. நகங்களில் சொத்தை வராது. அழகாய் மங்களகரமாக இருக்கும். லக்‌ஷ்மி களை சொட்டும்!” – வைத்தியமும் அழகுதான், பாட்டியைப் போலவே!

பள்ளிச்சிறுவன் (அறுபதுகளில்!) என்பதால் எனக்கும் மருதாணி உண்டு – உள்ளங்கையில் மட்டும்; பாட்டி வார்த்தைகளில், ‘கொழந்தைக்கும் உள்ளங்கையிலே ஒரு காலணா அளவு இட்டுவிடுடீ..’ – ஒரு முறை வேண்டாமென்றோ, மறந்தோ தூங்கி விட்டேன் – காலையில் காலில் ஏதோ ஒட்டியிருந்தாற்போல இருந்தது. காய்ந்த மருதாணி! ‘போர்வைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த காலில் காக்காய் வந்து இட்டிருக்கும்”- என்றாள் மன்னி நமுட்டுச் சிரிப்புடன்.

சுண்ணாம்பைக் கரைத்து, ஈர்க்குச்சியால் பூவோ, பெயரோ, ஏதோ ஒன்றை உள்ளங்கையில் எழுதி, அதன் மேல் மருதாணி இட்டால், காலையில் எழுதிய இடங்களைத் தவிர மருதாணி பற்றியிருக்கும் – பூவோ, பெயரோ உள்ளங்கையின் நிறத்தில் இருக்கும்! இந்தக் கைவிஷமம் தெரியுமா உங்களுக்கு?

Lawsonia inermis -Hina the henna tree (also mignonette tree) – மருதாணியின் தாவர இயல் பெயர் இது. கி.மு. 1200ல் முதன்முதலில் எகிப்தில் தலைக்கு சாயம் பூசிக்கொள்ள ஹென்னாவை உபயோகித்தனர். கிளியோபாட்ரா ஹென்னா பயன்படுத்தியதாகச் செய்திகள் உண்டு. அரைத்த மருதாணியை உடலில் பூசிக்கொண்டால் குளிர்ச்சி – உடலின் வெப்பநிலை குறையும் என்பதால், பாலைவன மக்கள் இதனைப் பூசிக்கொள்வார்களாம். நாளடைவில், கலை நயத்தோடு, அழகுக்காக பூசிக்கொள்ள, அதுவே இன்றைய மெஹந்தியின் தொடக்கமாகக் கருதலாம்!

அன்றைய மருதாணி இன்று வேதிப் பொருட்கள் கலந்த ஹென்னா ஆகிவிட்டது. சின்ன சின்ன கோன்களில் நிரப்பி, கேக்குகளுக்கு ஐஸிங் செய்வதைப் போல, மிக நுணுக்கமான டிசைன்களை கைகளிலும், கால்களிலும் வரைந்து விடுகின்றனர். திருமணங்களுக்கு முன்னால், ‘சங்கீத்’ என்ற பெயரில், மெஹந்தி இடும் நிகழ்ச்சி, ஆட்டம், பாட்டங்களுடனும், வட இந்திய ‘சாட்’ ஐட்டங்களுடனும் நம்ம ஊரிலும் இப்போது அரங்கேறிவிட்டன. தானாய்க் காய்ந்து விழுந்த மருதாணி துவையல், இன்று எண்ணை, டர்பெண்டைன் போட்டு உரித்து எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.

பனகல் பார்க் நல்லி எதிரில். பத்துப் பதினைந்து பேர் ஸ்டூலில் அமர்ந்து பெண்களுக்கு மெஹந்தி இட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். உள்ளங்கைக்கு மட்டும், புறங்கைக்கும் சேர்த்து, மணிக் கட்டு வரையில், முழங்கை வரையில், இரண்டு கைக்கும் என ஐம்பது ரூபாய் முதல் ஐந்நூறு ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்! இப்படி அந்தக் காலத்தில் இருந்திருந்தால், பாட்டிதான் உலகின் முதல் கோடீஸ்வரியாக இருந்திருப்பாளோ என்னவோ!

மருதாணியில் உள்ள Lawsone என்னும் நிறமி, தோலின் மேற்பரப்பிலுள்ள செல்களின் புரதத்துடன் இணைந்து, சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தைக் கொடுக்கின்றன. தோலின் தடிப்பு அதிகமாக உள்ள இடங்களிலும் (உள்ளங்கை, பாதம்), உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களிலும், மருதாணி அழுத்தமான, பிரகாசமான நிறமாகப் பற்றும்! இது ஒரு வகையான ‘தற்காலிக’ பச்சைகுத்தலாகக் (Tattoo) கொள்ளலாம்!

மருதாணியின் மருத்துவ குணங்கள் பாட்டிக்கு அன்றே தெரிந்திருந்தது! இதையெல்லாம் போகிற போக்கில் சொல்லிப் போன பாட்டியின் வைத்திய ஞானம், இன்று கூகிள் சாமியிடம் கிடைப்பது – வியப்பு!

  • டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe