மெல்லச் சாகுமோ இனி ஆணினம்..?!

 

 
 

 

 

 
உலகில் இருக்கும் ஒட்டுமொத்த ஆணினமும் ஆபத்தில், அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதுதான் இப்போதைய ‘ஹாட் டாப்பிக்’!
 
திடீரென்று ஆணினத்துக்கு என்ன ஆனது? அவர்கள் ஏன் அழியவேண்டும்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. முதலில் சமூகக் காரணம் கூறப்படுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த ஆணின் உயிரணு எண்ணிக்கையில் பாதியளவு கூட இன்று இருக்கும் ஆணிடம் இல்லை. மடமடவென்று விந்தணுவின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு வேலை, டென்ஷன், உணவு முறை, சுற்றுச்சூழல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இப்படியே போனால், வருங்காலத்தில் ஒரு ஆணால் இயற்கை முறையில் ஒரு பெண்ணை தாய்மையடையச் செய்ய முடியாத நிலை வந்துவிடும் என்கிறார்கள்.
 
இப்போதே ஆண் துணையின்றி பெண் மட்டுமே அவள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையெல்லாம் வந்துவிட்டது. பயனற்ற உயிரினம் அழியும் என்பது டார்வின் விதி. ஆணின் பிரதான வேலையான இனப்பெருக்கத்தைத் தரமுடியாமல் போகும்போது ஆணினமும் அழியத்தொடங்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
மருத்துவ காரணங்கள் வேறுமாதிரியாக சொல்கின்றன. இயற்கையே ஆணை பலவீனமானவனாகத்தான் படைத்திருக்கிறது. உருவத்திலும் உடல் வலிமையிலும் வேண்டுமானால் ஆண் பெண்ணைவிட சிறந்தவனாகத் தோன்றலாம். ஆனால், உள்ளுக்குள் நோய் எதிர்ப்பு திறனில் பெண் இனம் மிக வலுவுள்ள இனமாக இருக்கிறது.
 
இயற்கையே அப்படிதான் உருவாக்குகிறது. 100 பெண் சிசுக்களை பெண்கள் வயிற்றில் உருவாக்கும் அதே நேரத்தில் 140 ஆண் சிசுக்கள் அந்த பெண் சிசுக்களுக்கு இணையாக இயற்கை தோற்றுவிக்கிறது. அதாவது கருவாக உருவாகும்போதே ஆண் இனம் பெண் இனத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக உருவாக்கப்படுகிறது.
 
அப்படியிருந்தும் பிறக்கும் போது கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 100 பெண் குழந்தைகளுக்கு 106 ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில்தான் பிறக்கின்றன.  
 
கரு உருவான கணக்குப்படிப் பார்த்தால் 100 பெண் குழந்தைகளுக்கு 140 ஆண் குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். ஆனால், 34 ஆண் குழந்தைகளும் கருவிலே அழிந்துவிடுகின்றன. 
 
அதற்கு காரணம் ஆண் பலவீனன் என்பதுதான். இதில் என்னவொரு அதிசயம் என்றால் பெண் குழந்தைகள் இயற்கையான முறையில் கருவில் அழிவதேயில்லை.  கருவில் அழிவதெல்லாம் ஆண் குழந்தைகள் மாத்திரமே..!
 
சரி, பிறந்த பிறகாவது ஆண் குழந்தைகள் தாக்குப் பிடிக்கின்றனவா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதிலும் பெண் குழந்தைகள்தான் ஜெயிக்கின்றன. குழந்தைகள் பிறந்த 6 மாதங்கள் முடியும் முன்பே தொற்றுநோய், சுற்றுப்புற தூய்மை கேடால் 1,000 ஆண் குழந்தைகளில் 17 குழந்தைகளும், பெண் குழந்தைகளில் 11 குழந்தைகளும் இறக்கின்றன. இதிலும் ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதமே அதிகம். 
 
பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்புத்திறனுடன் இருப்பதற்கு ‘ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்’ என்ற ஒருவகை ஹார்மோன் தான் காரணம். இது கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் இருக்கும் பெண் குழந்தைக்கு மட்டுமே போகிறது. இது ஒரு போதும் தாயிடமிருந்து ஆண் குழந்தைகளுக்கு செல்வதில்லை. இந்த அதிசயமான போக்கு எதனால் ஏற்படுகிறது என்று மரபியல், செல்லியல், நுண் செயலியல் அறிஞர்கள் மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருக்கிறார்கள், விடைதான் கிடைத்தபாடில்லை. 
 
இந்த ஹார்மோன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கக் கூடியது. அதனால்தான் பெண் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள். 
 
கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் அதிர்ச்சிகள், உடலுக்கு ஒத்துக் கொள்ளாத மருந்துகள், தீமை தரும் உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும் விளைவுகளே குழந்தைகளை பிறவி ஊனமாக மாற்றிவிடுகிறது. 
 
அதிலும் கூட ஊனமுற்ற 100 குழந்தைகளில் 70 ஆண் குழந்தைகளாகவும், 30 பெண் குழந்தைகளாகவும் இருக்கிறது. இப்படி நோய்களில் இருந்து பெண் குழந்தைகளை மாய்ந்து மாய்ந்து காப்பாற்றுவது ‘ஹீமோபைலியா ஜிடெண்டரஸ்’ என்ற ஹார்மோனும் ‘இம்முனோ குளோபின்’ என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதமும்தான். இது பெண்களின் ரத்தத்தில் மட்டும்தான் அதிகமாக உள்ளது.
 
இதனால்தான், பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்துவிடுகின்றன. சராசரி ஆயுளை எடுத்துக் கொண்டால் ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள். 
 
மாரடைப்பு, திக்குவாய், வலிப்பு, பைத்தியம் போன்ற எல்லாமே ஆண்களைத்தான் தாக்குகிறது. உடல் வலிமை வேறு, உடலின் எதிர்ப்பு சக்தி வேறு, வலிமையை ஆணுக்கும், எதிர்ப்பு சக்தியை பெண்ணுக்கும் இயற்கை அளித்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்த ஆணினம் இனி மெல்ல மெல்ல சாகும் என்கிறது மருத்துவதுறை. இவையெல்லாவற்றையும் விட சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வின் முடிவு ஒட்டுமொத்த ஆணினத்தையும் ஆட்டம் காணவைத்து விட்டது. 
 
குரோமோசோம்களின் மாயாஜாலத்தால்தான் ஆண் பெண் உருவாக்கபடுகின்றன. ‘எக்ஸ்’ குரோமோசோமும் ‘ஒய்’ குரோமோசோமும் தான் இந்த மாயாஜாலம். பெண் என்றால் இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோம்களும், ஆண் என்றால் ஒரு ‘எக்ஸ்’, ஒரு ‘ஒய்’ குரோமோசோம்களுடன்தான் இருப்பார்கள். 
 
‘எக்ஸ்’ குரோமோசோம்
இதில் ‘எக்ஸ்’ குரோமோசோம் முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு கருக்கூறு. ‘ஒய்’ குரோமோசோம் அப்படியல்ல. அது பாதியளவு மட்டுமே வளர்ச்சியடைந்த கருக்கூறு. அதனால்தான் மருத்துவ உலகம் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு பெண்ணே ஆண் என்று கூறுகிறது. சமீபத்திய ஆய்வு இதை மேலும் மெய்ப்பிக்கிறது.
 
கிரேவ்ஸ் என்ற ஆஸ்திரேலிய பெண் விஞ்ஞானி இந்த அதிர்ச்சியான ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஆண் இனம் ‘ஒய்’ குரோமோசோம்களை கொண்டிருப்பதால் அது அழியத் தொடங்கியுள்ளது என்கிறார். ‘ஒய்’ குரோமோசோம் உள்ளுக்குள்ளேயே அழியும் தன்மைக் கொண்டது என்றும், அதன் அழிவால் புவியில் ஆண்களால் நிலைத்திருக்க முடியாது என்றும், கடைசியில் பூமியில் இருப்பது பெண் இனம் மட்டுமே என்றும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். 
 
மேலும் அவர், பெண்மையின் குரோமோசோமான ‘எக்ஸ்’ குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஆணின் குரோமோசோமான ‘ஒய்’ குரோமோசோமில் வெறும் 100 ஜீன்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆக மொத்தம் பெண்கள் இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோமுடன் 2,000 ஜீன்கள் கொண்டவர்களாகவும், ஆண்கள் ஒரு ‘எக்ஸ்’ (1,000 ஜீன்கள்) ஒரு ‘ஒய்’ (100 ஜீன்கள்) குரோமோசோம்களைக் கொண்டு 1,100 ஜீன்கள் மட்டுமே கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். 
 
ஆரம்ப காலங்களில் ஆண்களின் ‘ஒய்’ குரோமோசோமிலும் 1,000 ஜீன்கள் இருந்தனவாம், லட்சக்கணக்கான ஆண்டுகளில் ‘ஒய்’ குரோமோசோமில் இருந்த ஜீன்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த எண்ணிக்கைக்கு வந்ததாகவும் கூறுகிறார். 
 
 
மேலும், ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் பெண்ணுக்கு ஜோடியாக அமைந்துள்ளதால் ஜீன்களின் பாதிப்பை அவைகள் தாங்களே சரி செய்து கொள்கிறது. ஆணிடம் குரோமோசோம்கள் ஜோடியாக இல்லாததால் ஜீன்களின் பாதிப்பு ஏற்பட்டால் அது சரி செய்ய முடியாமல் அழிந்து போகிறது. இப்போது ‘ஒய்’ குரோமோசோமில் உள்ள ஜீன்களும் எதற்கும் பயன்படாத குப்பைகள் என்று பயமுறுத்துகிறார், கிரேவ்ஸ்.
 
“இந்த பரிணாம வளர்ச்சியில் ஈடுகொடுக்க முடியாமல் ஆணினம் அழிந்து போகும். இது ஒரு பரிதாபமான முடிவு. ஆண்கள் பரிதாபமானவர்கள்.” என்று தனது ஆய்வை முடிக்கிறார். கிரேவ்ஸ்.
 
ஆனால், இதெல்லாம் நடைபெற இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் இருக்கின்றன என்று கூறி விஞ்ஞானிகள் நம் வயிற்றில் பால் வார்க்கிறார்கள். ஆனாலும், மெல்லச்சாகும் ஆணினத்தை தடுக்கவே முடியாது என்று சத்தியமும் செய்கிறார்கள். 
 
வருங்காலம் ஆணுக்கு கொடூரமானதாகவே இருக்கும்!

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.