லக்னௌ:
உத்தரப் பிரதேசத்தில் ‘சமாஜ்வாடி ஸ்மார்ட் போன்’ என்ற இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் நேற்று அறிவித்தார்.
10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும், ஆன்லைன் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் கொண்ட தனியார் ஊழியர்கள் ஆகியோருக்கு இத்திட்டம் பொருந்தாது.
அடுத்த நிதியாண்டில், அக்டோபர் மாதத்துக்கு பிறகுதான் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். எனவே, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில், சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால்தான் இத்திட்டம் அமலுக்கு வரும்.
இது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும் திட்டமிட்டுள்ளன.