டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி., எல்லாம் இனி செல்போனில்! : போலீஸாரிடம் ’தொங்க’ வேண்டாம்!

டிஜிட்டல் மயமாகி வரும் இணைய யுகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, இனி கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன், டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வசதியை அளிக்கிறது, மத்திய அரசின், ‘டிஜிட்டல் லாக்கர்’ திட்டம். இதற்கென, digitallocker.gov.in என்ற தனி இணையதள முகவரி உள்ளது.
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த, ‘ஆன்லைன்’ பாதுகாப்பு பெட்டக வசதி, ‘டிஜி லாக்கர்’ எனும் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய அளவில் இந்த வசதி இன்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தின்படி, செல்போனில் ஓட்டுநர் உரிமமும் ஆர்.சி. வாகன பதிவு சான்றிதழையும் இணைக்கும் வசதியை மத்திய அரசு இன்று தொடங்கியுள்ளது.

ANDROID-ல் – டிஜி லாக்கர் என்ற அப்ளிகேஷனில் இந்த இணைக்கும் வசதிகளை மத்திய அரசு இன்று தொடங்கியது. இதுவரை 16 ஆவணங்கள் இந்த அப்ளிகேஷனில் இணைக்கும் வசதியை அரசு ஏற்படுத்திய நிலையில், 17வதாக வாகன ஓட்டிகளுக்கான ஆவணங்களை இணைக்கும் வசதியை நிதின் கட்காரியும் ரவிசங்கர் பிரசாத்தும் தொடங்கி வைத்தனர்.

நாடு முழுக்க உள்ள 19.5 கோடி வாகன பதிவுகள், 9 கோடி வாகன உரிமங்களும் இதில் இணைக்கப்படுகின்றன. பொதுமக்கள் இந்த app-ல் பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பயன்படுத்தலாம்.

இந்த விவரங்கள் ஆதார் எண்ணில் பதிவு செய்திருந்தால் அந்த தகவல் இந்த ஆப்பில் தானாகவே இணைக்கப்பட்டுவிடும். எனவே, போக்குவரத்து காவல்துறையினர் இனி லைசென்ஸ் கேட்டால் செல்போனில் உள்ள ஆவணங்களை காட்டினாலே போதுமானது.

டிஜிட்டல் லாக்கர் ஒருவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் இணையதளத்தின் மூலம் தங்களுக்கான லாக்கர் வசதியை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஆதார் எண்ணை இணையதளத்தின் லாகின் பகுதியில் சமர்ப்பித்து தங்களுக்கான கணக்கைத் துவக்கலாம். அதன் பிறகு ஒருமுறை பாஸ்வேர்டு, மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பாஸ்வேர்டு மூலம், லாக்கரை துவக்கிக் கொள்ளலாம். அதன் பின், பயனாளிகள் தங்களுக்கான பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளலாம்.

லாக்கரை அமைத்த பின், அதில் சான்றிதழ்களை பதிவேற்றி சேமிக்கலாம். பான் கார்டு, பள்ளி, கல்லுாரி சான்றிதழ், பாஸ்போர்ட், அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இதில் சேமிக்கலாம். சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அல்லது, ‘பி.டி.எப்.,’ கோப்பாக பதிவேற்றலாம். சான்றிதழ்களை யாருக்கேனும் சமர்ப்பிக்க விரும்பினால், லாக்கர் மூலமான, இ – மெயில் வழியே அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் கைகளில் சான்றிதழ்களை எடுத்துச் செல்வதை தவிர்க்கலாம்; சான்றிதழ் தொலைந்து விடும் எனும் கவலை இல்லாமலும் இருக்கலாம்.

இவை தவிர, பல்வேறு அரசு அமைப்புகளால் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் ஆவணங்களையும், இதில் சேமித்து வைக்கலாம். ஆவணங்களை இணைய கையெழுத்திட்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

பொதுமக்களுக்கு டிஜிட்டல் சேமிப்பு வசதியை அளிப்பதுடன், காகித பரிமாற்றத்தைக் குறைத்து அரசு நிர்வாகத்தையும் வேகமாக்க இது உதவும் என்று கருதப்படுகிறது.