சட்டமானது ஜி.எஸ்.டி. மசோதா

16 மாநிலங்களின் ஒப்புதலுக்குப் பின்னர் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு, 16 மாநில சட்டசபைகள் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மத்தியப்பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார், டெல்லி உள்பட 16 மாநிலங்கள் இந்த மசோதாவை மாநில சட்டசபைகளில் நிறைவேற்றியுள்ளன. இதன் மூலம் 50 சதவிகித மாநில சட்டசபைகளின் ஒப்புதல் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கிடைத்தது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவரும் அரசின் முயற்சிகள் வரையறுக்கப்பட்ட கால கெடுவுக்கு முன்பாகவே நடந்து வருவதாகவும், மாநிலங்களின் ஒப்புதலை பெற 30 நாட்கள் காலகெடு வைக்கப்பட்டிருந்தது என்றும், ஆனால், இந்த பணி 23 நாட்களிலேயே நிறைவேற்றுப்பட்டு விட்டதாக சமீபத்தில் ஹஸ்முக் அதியா தெரிவித்து இருந்தார்.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த மசோதா தற்போது சட்ட வடிவம் பெற்றுள்ளது. இனி, இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு அரசாணையாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்ட பின்னர், வரும் குளிர்கால கூட்டத் தொடரில் எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு முன்பு அறிவித்து இருந்ததுபோல், 2017ஏப்ரல் மாதம் சரக்கு சேவை வரி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.