
ஐஎன்எக்ஸ்., மீடியா வழக்கில் கைதாகி சிபிஐ விசாரணையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனு, திங்கள் கிழமை இன்று விசாரணைக்கு வருகிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், அந்த நிறுவனம் அன்னிய முதலீட்டைப் பெறுவதில், மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பதவியைப் பயன்படுத்தி, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் முறைகேடாக நிதிப் பரிமாற்றம் செய்யப் பட்டதாகவும், கார்த்தி சிதம்பரம் அதில் பெரும் பலன் அடைந்ததாகவும் சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்குகளில் தாம் கைது செய்யப் படாமல் இருக்க, தில்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து, அதன் மூலம், கைது செய்யத் தடை விதிக்கும் வகையில் தொடர்ந்து நீட்டிப்பு பெற்று வந்தார் ப.சிதம்பரம். ஆனால் கடந்த வாரம் தில்லி நீதிமன்றம் திடீரென்று, ப.சிதம்பரத்தை கொள்ளைக்கூட்டத் தலைவர் என்று அதிரடியாக விமர்சித்ததுடன், அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்து, தள்ளுபடி செய்தது. இதனால் சிபிஐ.,யின் அதிரடி கைது நடவடிக்கையில் சிக்கினார் சிதம்பரம்.
இந்நிலையில், திங்கள் கிழமை இன்று வரை சிதம்பரத்தை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றது சிபிஐ.,
இதனிடையே, சிபிஐ.,க்கு வழங்கப் பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதே நேரம், தங்களது கேள்விகள் எதற்கும் சிதம்பரம் பதில் சொல்லவில்லை என்று கூறிவந்தது சிபிஐ.,
மேலும், இந்த வழக்கில் அடுத்த அமைப்பான அமலாக்கத்துறையும், ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள சட்ட நடவடிக்கைகளுடன் தயாராக காத்திருக்கிறது.
இதனிடையே, சிபிஐ., காவல் கால அவகாசம் முடிவதை அடுத்து, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப் படுகிறார் ப.சிதம்பரம். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் அதே நேரத்தில், சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு குறித்து சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப் படும் என்று கூறப் படுகிறது