8 செயற்கைக் கோள்களுடன் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-35

ஸ்ரீஹரிகோட்டா: அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி சி-35 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து காலை சரியாக 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 48 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 8.42 மணிக்கு தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி ஆராய்ச்சி செய்து வருகிறது. மேலும் வர்த்தக ரீதியாகவும் ஆன்டிரிக்ஸ் நிறுவனம் மூலம் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் பருவநிலை மாற்றங்கள், புயல் எச்சரிக்கை உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் ஸ்கேட்சாட்-1 செயற்கைகோளை இன்று காலை 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. இதற்கான 48 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 8.42 மணிக்கு தொடங்கியது. இந்த செயற்கைகோள் 730 கிலோமீட்டர் உயரத்தில் துருவ சுற்று வட்டப்பாதையில் 98.1 டிகிரியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் எடை 371 கிலோ.  புயல் எச்சரிக்கை, பருவநிலை மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறியும் வகையில் ஆஸ்கேட்-2 என்ற செயற்கைகோளை இஸ்ரோ கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி விண்ணில் நிலை நிறுத்தியது.

ஒடிசா கடற்கரை பகுதியில் பாஃலின் புயல் எச்சரிக்கையை ஆஸ்கேட்-2 அளித்த தகவல்களுடன் இஸ்ரோ முன்கூட்டியே துல்லியமாக தெரிவித்தது. இதனால் பல உயிர்கள் அப்போது காப்பாற்றப்பட்டது. இந்த ஆஸ்கேட்-2 செயற்கைகோளின்  ஆயுட்காலம் 2014 மார்ச்  மாதத்துடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இதே வகையில் மற்றொரு செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்து ஸ்கேட்சாட்-1 என்ற செயற்கைகோள் தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை அனுப்பிய ஆஸ்கேட்-2 செயற்கைகோளை விட, அதிநவீன கருவிகள் தற்போது அனுப்பப்பட்டுள்ள ஸ்கேட்சாட்-1 செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது புயல், பருவநிலை தொடர்பான சிக்னல்களை அனுப்பி மக்களை பாதுகாக்க உதவும்.

ஸ்கேட்சாட்-1 செயற்கைகோளுடன் அல்ஜீரியா நாட்டின் அல்சாட் – 1பி, அல்சாட் – 2பி,  அல்சாட் – 1என், கனடாவின் என்எல்எஸ்-19, அமெரிக்காவின் பாத்பைஃன்டர் -1,  மும்பை ஐஐடியின் பிரதம், பெங்களூர் பிஈஎஸ் பல்கலைக்கழகத்தின் பைசாட் ஆகிய 7  செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இவை பூமியிலிருந்து 689 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்ட பாதையில்  நிலைநிறுத்தப்பட உள்ளன. ஒரே ராக்கெட் மூலம் இரு வேறு சுற்றுப்பாதையில்  செயற்கைகோள்களை நிலை நிறுத்துவது இதுவே முதல் முறையாகும். இதனால்  பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் செலுத்துவதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியதில் இருந்தே, விஞ்ஞானிகள் ராக்கெட் செயல்பாடுகளை பரிசோதித்து வந்தனர்.