
கேரளாவில் ஜூன் மாதம் முதல் வாரத்தில், தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன் மாதம் விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் பலத்த மழையாக பெய்தது. ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் மழை மேலும் அதிகரித்தது. இதனால் கேரளாவின் மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஏராளமான வீடுகள், பயிர் நிலங்கள் சேதமடைந்தன. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆகஸ்டு மாத மத்தியில் மழையின் தீவிரம் குறையவும் நிவாரண பணிகள் வேகம் எடுத்தன. பாதிக்கப்பட்ட வீடுகள் சீரமைக்கப்பட்டு வந்தன.வீடுகளை சூழ்ந்த வெள்ளமும் வடிய தொடங்கியதை அடுத்து மக்கள் நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல தொடங்கினர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக மலையோர கிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதோடு சூறைக்காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிவாரண பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டது.
கேரளா முழுவதும் மழை நீடித்து வந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் இப்போது ஓணப் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியதை முன்னிட்டு 10 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓணத்தை முன்னிட்டு மக்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். இப்போது மழை பெய்து வருவதால் மக்கள் ஓண கோலமிட முடியாமல் தவிக்கிறார்கள். போன வருடமும் கேரளாவில் மழை காரணமாக ஏற்பட்ட சேதத்தால் ஓணதிருநாளை விமர்சையாக கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.