― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதமிழகத்தில் இருந்து ஆளுநர்கள்... ஒரு பார்வை!

தமிழகத்தில் இருந்து ஆளுநர்கள்… ஒரு பார்வை!

- Advertisement -

தமிழகத்திலிருந்து முதன்முதலில் மேற்கு வங்க ஆளுநராக மூதறிஞர் ராஜாஜி நியமிக்கப்பட்டார் .பின்பு இராஜ பாளையம் குமாரசாமி ராஜா ஒரிசாவின் ஆளுநராக நியமிக்கப் பட்டார். இவர்கள் இருவரும் தமிழகத்தின் முதல்வர்களாக இருந்தவர்கள்.

ஆந்திரத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வி.வி.கிரி சென்னை தியாகராய நகரில் தான் வசித்து வந்தார். அவரை கேரள ஆளுநராக 1960களின் துவக்கத்தில் நியமிக்கப்பட்டார். இவரது குடும்பம் பெரிய குடும்பம். இவர் கேரள ஆளுநராக இருந்தபோது திருவனந்தபுரத்திலிருந்து தமிழ் திரைப் படங்கள் பார்க்க நாகர்கோவிலில் உள்ள திரையரங்களுக்கு, இவர் சார்பில் 20, 30 பேர் கிளம்பி வந்துவிடுவார்கள். அன்று தியேட்டர் உரிமையார்கள் எல்லாம் சிரமத்திற்கு உள்ளாவர். இவர் தொழிற்சங்கத் தலைவராக இருந்து குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவர். இவர் குடியரசுத் தலைவராக போட்டியிட்ட போதுதான் ஸ்தாபனக் காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என இரண்டாகப் பிரிந்தது.

தமிழக அரசின், காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜோதி வெங்கடாசலம் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரது ஊறுகாய் நிறுவனம் சென்னையிலிருந்து கேரளாவிற்கு விரிவு செய்துவிட்டாரென விமர்சனமும் எழுந்தது. பின் தமிழ்நாடு ஸ்தாபனக் காங்கிரஸ் தலைவராக இருந்த பேராசிரியர். பா.ராமச்சந்திரன் காங்கிரசில் இணைந்து கேரளாவின் ஆளுநராக வந்தார். இவர் ஜனதா கட்சி சார்பில் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார் . இவரது சொந்த ஊர் குடியாத்தம் பக்கம். ஜோதி வெங்கடாசலம், பா. ராமச்சந்திரன் இருவருக்கும் எனக்கு நல்ல அறிமுகமுண்டு. பா.ராமச்சந்திரன் எளிமையாக இருப்பார். ஜோதி வெங்கடாசலத்தின் வீடு சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அருகே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் அணுகி பேச முடியும்.

முன்னாள் ராணுவ உயரதிகாரி இராஜபாளையம் டி.கே. ராஜூ வடகிழக்கு யூனியன் பிரதேசத்தின் லெப்டினென்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

சி.சுப்பிரமணியம்மகாராஷ்டிர ஆளுநராக 1990 களில் நியமிக்கப்
பட்டார். பின் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்த வி. சண்முகநாதன் மேகாலயா ஆளுநராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டு, பின் அவர் மீதான குற்றச்சாட்டின் பேரில் பதவி விலகினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சதாசிவம் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆக தமிழகத்தில் இருந்து 4 பேர் கேரள ஆளுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

குமரி அனந்தன் பி.வி.நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் போன்றோர் ஆட்சிக் காலத்தில் ஆளுநராக முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்கவில்லை. அவரது புதல்வியான டாக்டர் தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.

பழ. நெடுமாறன் காங்கிரசில் இருந்து பிரிந்து பின் திரும்பவும் இந்திரா காங்கிரசில் இணைக்க இந்திரா காந்தி விரும்பியபோது, ஆளுநர் பதவி கூட அளிப்பதாக டெல்லியிலிருந்து பி.வி.நரசிம்மராவ் மூலமாக தெரிவிக்கப்
பட்டது. நெடுமாறனும் அதை மறுத்துவிட்டார்.

டெல்லியில் 2001 டிசம்பரில் அன்றைய அமைச்சர் முரசொலி மாறனோடு அன்றைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானியை சந்தித்தபோது, அவர் ஆலடி அருணா நேற்று தன்னை சந்தித்து கவர்னர் பதவிக்கான தன்னுடைய சுயகுறிப்பை கொடுத்துவிட்டு சென்றார் என்று முரசொலி மாறனிடம் என்று சொன்னார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இல்லை. ஆலடி அருணா என்பதை அல்லாடி அருணா என்று அத்வானி குறிப்பிட்டு சொன்னது இன்றும் நினைவில் உள்ளது. அந்த வாய்ப்பு ஆலடி அருணா கிட்டவில்லை.

காங்கிரசுக்கு உழைத்த காளியண்ணன், குமரி அனந்தன், குளச்சல் முகமது இஸ்மாயில், தஞ்சை இராமமூர்த்தி போன்றவர்களை எல்லாம் ஆளுநராக காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்க தவறிவிட்டது.

இரா. செழியனை ஆளுநராக பதவியேற்றுக் கொள்ளும்படி வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால் ஆகிய இருவரும் வற்புறுத்தியும் அவர் ஆளுநரே கூடாது என்ற உறுதி கொண்டவன். அதனால் அந்த பொறுப்பை ஏற்கவியலாது என்று மறுத்துவிட்டார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆளுநரை பற்றி, “Governors are the Tenants of States Raj Bhavan without paying rent”. அதாவது, ராஜ் பவனில் வாடகையில்லாமல் தங்குபவர்கள் என்று கருத்து கூறியுள்ளார்.

கடந்த1977 காலகட்டங்களில் எளிமையின் அடையாளமாக காந்தியவாதி பிரபுதாஸ் பட்வாரி தமிழகத்தின் ஆளுநராக இருந்தார். அவர் ராஜ்பவனில் அசைவ உணவு, புகைப்பிடித்தல், மது பயன்படுத்துவது கூடாது என்று கடுமையான நடவடிக்கைகளை எடுத்தவர்.

இந்தியக் குடியரசுத் தலைவராக அப்போதிருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி சென்னை வந்தபோது தனக்கு அசைவ உணவு வேண்டுமென்று ராஜ்பவன் ஊழியர்களிடம் கேட்டார். ஊழியர்களோ அசைவ உணவு இங்கு சமைப்பதும், பரிமாறுவது கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு கவர்னர் பட்வாரி புலால் உணவு உண்ணக் கூடாது என்று கடுமையான உத்தரவிட்டுள்ளார் என்ற விவரம் சஞ்ஜீவ ரெட்டிக்கு தெரியவந்தது. பட்வாரியிடம் இது குறித்து சஞ்சீவ ரெட்டியிடம் கேட்டபோது யார் வந்தாலும் அசைவ உணவு பரிமாறக்கூடாது என்று நான் தான் உத்தரவிட்டேன். உங்களுக்கு வேண்டும் என்றால் வெளியே சென்று சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். குடியரசுத் தலைவரை பார்த்து ஒரு ஆளுநர் கறாராக சொன்ன நிகழ்வு எல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்போது அது ஒரு சர்ச்சையாகவே இருந்தது.

பிரபுதாஸ் பட்வாரி ஆளுநராக இருந்தபோது, சிலகாலம் விருந்தினராக ஆச்சார்யா கிருபளானி கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தார். சென்னை SIET பெண்கள் கல்லூரி பேராசிரியர்களுடைய வேலைநிறுத்தம் குறித்து எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அப்போது கவர்னர் பட்வாரியை சந்திக்க செல்வதுண்டு. அந்த காலக்கட்டத்தில் மாணவர் அரசியல் அமைப்பில் இருந்ததால் அங்கு தங்கியிருந்த ஜேபி கிருபளானியையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

ஆளுநர் பதவி வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதம் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா ஆளுநர் பதவி தேவையில்லை என்று கூறினார். தலைவர் கலைஞர் அமைத்த ராஜமன்னார் குழுவும் ஆளுநர் பதவி கூடாது என்று அறிக்கை கொடுத்தது. கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா ஆட்சியில் ஆளுநர் பதவி குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிட்டார். ஆளுநர் பிரிவு 356 என்பது மாநிலங்களின் உரிமைகளை நசுக்கத்தான் பயன்படுத்துமே ஒழிய அதை ஜனநாயக ரீதியில் பெரும் பாதிப்புகளைத்தான் விளைவிக்கும் என்பது ஜனநாயவாதிகளின் கருத்து. இதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்தாகவும் இருந்தது. இந்தியா என்பது பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், பல்வேறு சூழல்கள் நிலவும் நிலையில் ஆளுநரின் அணுகுமுறைகள் அதற்கு குந்தகமாகத்தான் அமையும் என்ற கருத்துகளும், விவாதங்களும் நடந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தேசியக் கட்சிகளோடு மத்தியில் கூட்டணியில் இருந்தபோதும் திராவிடக் கட்சியினர் யாரும் ஆளுநராக வந்ததில்லை.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version