
விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்துடன் தரைப்பகுதியில் மெதுவாக இறங்கி ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப் பட்ட விக்ரம் என்ற பெயர் சூட்டப்பட்ட லேண்டர் சாதனம் கடைசி நேரத்தில் இஸ்ரோவுடனான சிக்னல் கட்டுப் பாட்டை இழந்தது. இருப்பினும், அது நிலவின் தரைப் பகுதியில் இறங்கியிருப்பதாகவும், திட்டமிடப் பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அது இருப்பதாகவும் நேற்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். மேலும் அது குறித்த படங்களை விரைவில் வெளியிடுவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க ஆர்பிட்டரின் சுற்றுவட்டப்பாதையை 50 கி.மீ. தூரமாக குறைக்க இஸ்ரோ முயற்சி மேற்கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஆர்பிட்டரை நிலவின் 100 கி.மீ., சுற்று வட்டப் பாதையில் இருந்து 50 கி.மீ., தொலைவாகக் குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.