தெலுங்கு பெண் எழுத்தாளர் டாக்டர் சோமராஜு சுசீலா!
‘சாகித்திய திக்கஜம்’ என்றும் ‘ஸ்த்ரீ சக்தியின் ப்ரத்யக்ஷ ரூபம்’ என்றும் சக தெலுங்கு எழுத்தாளர்களால் புகழப்படும் தெலுங்கு பெண் எழுத்தாளர் டாக்டர் சோமராஜு சுசீலா வியாழனன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
எழுத்தாளர், வேதியியல் முனைவர், சமுதாய விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் டாக்டர் சோமராஜு சுசீலா (74) ஹைதராபாத் நியூ போயன்பல்லி, கிருஷ்ணாரெட்டி நகர் காலனியில் உள்ள அவருடைய வீட்டில் வியாழன் அதிகாலை மாரடைப்பால் மறைந்தார்.
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரத கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றை இளைஞர்களிடம் எடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றினார் சுசீலா.
1945இல் கிழக்கு கோதாவரி மாவட்டம் ‘சித்தம்’ கிராமத்தில் பிறந்தார் சுசீலா. வேதியியலில் பிஎச்டி பட்டம் பெற்றார். கணவர் ரங்காராவு, மகள் சைலஜா, மகன் ஸ்ரீகாந்த் உள்ளனர்.
சுசீலா ஐம்பது வயதுக்கு மேல்தான் இலக்கிய உலகில் பிரவேசித்தார். 2014 ஆம் ஆண்டு வரை ஆர்எஸ்எஸ் பௌத்திக் பிரமுக், சம்பர்க் பிரமுக்…என்று முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
‘இல்லேரம்மா’ என்ற கதைகள் மூலம் எழுத்தாளராக மிகச் சிறப்பான முத்திரை பதித்தார். தர்மவிஜயம் (மொழிபெயர்ப்பு), தீபசிக, பத தர்சினி, ஸ்ரீராம கதா (மராட்டி மொழிபெயர்ப்பு), முக்குரு கொலம்பஸ்… போன்றவற்றோடு கூட புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் நாயுடம்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதி தெலுங்கு மொழிக்கு இலக்கிய சேவை செய்துள்ளார்.
தான் பார்த்த, தனக்கு நேர்ந்த அனுபவங்களையே கதைகளாக எழுதுவதாகத் தெரிவித்தார். திருமதி சுசீலா ஒரு தெலுங்கு இதழில் ‘பெள்ளிபந்திரி’ என்ற தொடரை இறுதி வரை எழுதி வந்தார். ஸ்ரீபாத ராயரை தன் மானசீக குருவாக ஏற்று மிகச் சிறப்பான படைகளை அளித்துள்ளார் சுசீலா.
எத்தகு பிரச்சினையையும் எதிர்கொண்டு வாழ்க்கையை அழகாக எவ்விதம் வழிநடத்துவது என்பதை இலக்காகக் கொண்டு தன்னுடைய இலக்கியப் பயணத்தை தொடர்ந்தார். அவருடைய கதைகளில் நகைச்சுவைக்கு முதலிடம் காணப்படுகிறது.
ஒருபுறம் இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறந்தாலும் சொந்தத் தொழிலிலும் முனைப்பு காட்டினார். விஜயவாடா ஸ்டல்லா மேரீஸ் கல்லூரியில் கெமிஸ்ட்ரி விரிவுரையாளராகவும் பின்னர் 1966 முதல் 1974 வரை பூனாவில் நேஷனல் கெமிக்கல் பரிசோதனை நிலையத்திலும் வேலை பார்த்தார். 1974இல் ஹைதராபாதில் ‘பாக்கியநகர் லேபரேட்ரீஸ்’ அமைப்பைத் தொடங்கி திறம்பட நடத்தி வந்தார். தற்போது அதனை இவருடைய மகன் ஸ்ரீகாந்த் நடத்தி வருகிறார்.
திருமதி சுசீலா, மிக நீண்ட காலம் அகிலபாரத மகிளா விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவராகவும், பாரதிய உற்பத்தி அமைப்புகள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்புகள் வகித்துள்ளார். இவருடைய மறைவினை தெலுங்கு இலக்கிய ரசிகர்கள் ஏற்க முடியாமல் தவிக்கின்றனர்.