
ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் காவல் விசாரணையில் உள்ள சிதம்பரத்திற்கு அக்.30 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்து சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சி.பி.ஐ., தரப்பின் காவல் விசாரணையில் இருந்து, சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியது தில்லி நீதிமன்றம்.
அதே நேரம், அமலாக்கத் துறை விசாரணையில் இருப்பதால் அவரால் ஜாமீனில் வெளி வர முடியாத நிலை இருந்து வந்தது. அமலாக்கத்துறை விசாரணை 7 நாட்கள் நீடித்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை காவல் விசாரணையில் இருந்து ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு, தில்லி நீதிமன்றத்தில் அக்.24 இன்று அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், சிதம்பரத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்த அக்.,30 வரை அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்தது.
அதே நேரம், சிதம்பரத்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அவரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.