
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தாக்குதல் நடத்த வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை அடுத்து பெங்களூரில் பயங்கரவாதிகள் ‘ஸ்லீப்பர்செல்‘ போன்று இருப்பதாக காவல்துறைக்கான அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். இதனால், பெங்களூருக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர் விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி செய்யக் கூடும் என்ற தகவலால் போலீசார் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து பெங்களூருக்கு வந்து தங்கியிருக்கும் நபர்களிடம் விசாரிக்கவும் திட்டமிடப்பட்டது. முன்னதாக, பெங்களூருவுக்கு கல்வி கற்கவும், தொழில் ரீதியாகவும், சுற்றுலா ரீதியாகவும் வந்த வெளிநாட்டினரிடம் தீவிர சோதனை நடத்த வேண்டும் என மாநகர காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான போலீசார் பெங்களூரில் வசித்து வரும் வெளிநாட்டினரின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.
அவர்களிடம் விசா, பாஸ்போர்ட் உள்பட அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா என்று சோதித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த சோதனையில் பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆப்பிரிக்ர நாடுகளை சேர்ந்த 7 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெங்களூரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது 29 ஆண்கள், 31 பெண்கள் என மொத்தம் 60 பேர் உரிய ஆவணங்கள் இன்றி பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 60 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கைதான 60 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது! கைதானவர்களில் சிலர் இந்தியாவுக்கான ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும், வங்கி கணக்குகளையும் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால் போலி ஆதார் அட்டை உள்பட முக்கிய ஆவணங்கள் வாங்கியது எப்படி? உதவி செய்தது யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நேற்று பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் செய்தியாளர்களிடம் பேசிய போது… “பெங்களூரு நகரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி சட்டவிரோதமாக தங்கியதாக வங்கதேசத்தை சேர்ந்த 60 பேரை கைது செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து வருகிறார்கள்.
பெங்களூரு மாநகராட்சியில் கூட சிலர் பணி செய்தனர். இவர்களை யார் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
பெங்களூல் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பவர்கள் உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பதை சரிபார்த்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்குவதற்கு வீடு வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீடு வழங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.