
திருவள்ளுவர் ஒன்றும் திமுக., தலைவர் அல்லர்… ஒரு வட்டத்துக்குள் அடக்க.. என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார் பாஜக., தலைவர் முரளிதர் ராவ்.
இரு தினங்களுக்கு முன் தொடங்கிய திருவள்ளுவர் அரசியல் திமுக.,வினரால் பெரிதாகக் கிளப்பப் பட்டது. நேற்று தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியில் திருவள்ளுவர் சிலை அசிங்கம் செய்யப் பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், தமிழுக்காக பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர் கதையாகிவிட்டது எனவும், இதற்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தனது டுவிட்டர் பதிவில் தொடர்ச்சியாகத் தெரிவித்த கருத்துகள்…
உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைப்பதை ஸ்டாலின் கைவிட வேண்டும். திருவள்ளுவர் ஒரு துறவி; அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்லர்!