
25 வயது விளையாட்டு வீராங்கனை சுட்டுக்கொலை. பயிற்சியாளர் தான் கொலையாளியா? ஹரியானா குருக்ராமில் செவ்வாய்க்கிழமை இன்று இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.
25 வயது ‘தைக்வாண்டோ’ விளையாட்டு வீராங்கனை சரிதா இன்று மதியம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவருடைய கொலையின் பின் பயிற்சியாளரின் கரம் உள்ளதென்று சரிதாவின் குடும்பத்தார் குற்றம் சுமத்தினர்.
தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோச் பல முறை சரிதாவை தொந்தரவு செய்தார் என்றும் அதற்கு அவர் உடன்படாததால் இத்தகைய கொடும் செயலுக்கு துணிந்து விட்டார் என்றும் சரிதாவின் சகோதரர் குற்றம் சாட்டினார்.
குருக்ராமில் உள்ள ‘போராகுர்த் ‘ கிராமத்தில் 25 வயது பெண் சுட்டுக் கொல்லப்பட்டதாக செவ்வாய் மதியம் 4 மணி அளவில் போலீஸாருக்கு செய்தி வந்தது. உடனே விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை தைக்வாண்டோ வீராங்கனை சரிதா என்று அடையாளம் கண்டனர். அவரை சுட்டுக் கொன்ற குற்றவாளி அங்கிருந்து ஓடிவிட்டார்.

சரிதா குடும்பத்தாரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தைக்வாண்டோ ப்ளேயரும் பயிற்சியாளருமான குற்றவாளியை சரிதாவுக்கு 2013 முதல் தெரியும் என்று குடும்பத்தார் தெரிவித்தனர். மாயமான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.