எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியைப் பயன்படுத்துகிறார் மோடி: கம்யூ. குற்றச்சாட்டு

புதுதில்லி: எதிர்க் கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக தில்லியில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய அரசு, பிற கட்சிகளுடனோ அல்லது நாடாளுமன்றத்திடமோ ஆலோசனை நடத்துவதில்லை. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு ஊடகமான அகில இந்திய வானொலியை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இதே விவகாரத்தில், மத்திய அரசு அவசரச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் அதையும் எங்களது கட்சி எதிர்க்கும்…என்றார் ராஜா.