நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு !

narasimha-rao புது தில்லி: காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நினைவகத்தைக் கட்ட இப்போது மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் முக்கியமானவர் பி.வி.நரசிம்ம ராவ். 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் அரசை தலைமையேற்று வழிநடத்தியவர். சாதனைகள் பல செய்த அவர், இந்திய பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியவர். தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர். நரசிம்ம ராவ் கடந்த 2004-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 10 ஆண்டுகளாகியும் முந்தைய காங்கிரஸ் அரசு அவருக்கு நினைவகம் அமைக்க மறுத்துவிட்டது. 2013-ம் ஆண்டு முதல் எந்த ஒரு தலைவருக்கும் தனியாக நினைவகங்களை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்தது. இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு யமுனை நதிக்கரையில் சமாதி வடிவில் நினைவகம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, அங்கே விஜயா காட் மற்றும் சாந்திவானுக்கு நடுவில் 22.56 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நிறுவப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஜெயில் சிங், சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்களின் நினைவகங்கள் அமைந்துள்ளன. 9 நினைவகங்களை அமைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த சமாதி காம்ப்ளக்ஸில் 6 சமாதிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன. இன்னும் 3 மீதமுள்ளன. அந்த இடத்தில் நரசிம்மராவுக்கு நினைவகம் எழுப்பப்படுகிறது.