நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: நிலக்கரி, இரும்புத்தாது கையாள தடை விதித்தது பற்றிய வழக்கில் சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் சேப்பாக்கம் தொடங்கி ராயபுரம் வரை உள்ள பகுதிகளில், பெருமளவில் தூசு மற்றும் கரித்துகள்கள் படிந்ததுடன் சுகாதார சீர்கேடு அதிகரித்ததாகவும் புகார்கள் எழுந்தன. பல கட்டிடங்களிலும் கரி தூசுபடிந்து, சுவாசம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், முத்தையா மேஸ்திரி குடியிருப்போர் நலச்சங்கம், ராயபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது கையாளுவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், அந்தப் பணியை எண்ணூர் துறைமுகத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை துறைமுக அதிகாரிகள், லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி அந்த கமிட்டியும் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு நிலக்கரித்துகள் மாசு கூட சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அமைவதற்கு எந்த வகையில் நடவடிக்கை எடுக்க முடியும், இதற்கு சென்னை துறைமுகம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் முக்கியம். இந்த நோக்கில் ஒரு விரிவான அறிக்கையை கோர்ட்டுக்கு தாக்கல் செய்யுங்கள். அதனை ஆராய்ந்து பிறகு முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். 14 வாரங்களுக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறும். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிர்த்தரப்பினரும் அந்த அறிக்கையின் மீது தங்கள் எதிர்வினையை பதிவு செய்யும் வகையில் இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். இதன்படி வழக்கின் மீதான விசாரணை ஜூலை 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.