பெட்ரோல், டீசல் விலை குறைவு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

புது தில்லி: பெட்ரோல் டீசல் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபடி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக குறைந்தன. பெட்ரோல் விலை 10 முறைக்கு மேல் குறைக்கப்பட்டது. இதன் மூலம் முன்னர் இருந்த விலையில் இருந்து ரூ. 17 வரை குறைக்கப்பட்டிருந்தது. டீசல் விலையும் 12 ரூபாய் அளவுக்கு குறைந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 2 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. பெட்ரோல் 82 காசும், டீசல் 61 காசும் உயர்த்தப்பட்டது. பின்னர், மார்ச் 1ல் பெட்ரோல் விலை அதிரடியாக ரூ.3.18 உயர்த்தப்பட்டது. டீசல் விலையும் ரூ.3 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசு குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 31 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.