கிரிராஜ் சிங் வீடு மீது முட்டை வீச்சு: இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு

பாட்னா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வீடு மீது இளைஞர் காங்கிரசார் முட்டை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அது அக்கட்சித் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு எதிராக பீகார்- பாட்னாவில் அனந்த்புரி பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கிரிராஜ் சிங் வீட்டை நோக்கி முட்டைகளையும், அழுகிய தக்காளியையும் வீசி எறிந்தனர். அவருடைய புகைப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், பதாகைகளையும் கிழித்து சேதப்படுத்தினர். இதை அடுத்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.