பவானி சிங் ஆஜராவதற்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்.7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிரான வழக்கில், அடுத்தக் கட்ட விசாரணையை வரும் 7-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக ஆஜராகி வருகிறார் பவானி சிங். இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து, பவானி சிங்கை நீக்கக் கோரியும், மேல் முறையீட்டு வழக்கில் வாதங்களை எழுத்து பூர்வமாக அளிக்கக் கோரியும் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் ஆஜரானார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கேடிஎஸ் துள்சி ஆஜராகி ஃபாலி நாரிமனின் வாதத்தை ஆமோதிக்கும் கருத்துகளை முன்வைத்தார். வழக்கறிஞர்களின் வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அன்பழகன் மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் ஏப். 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.