ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 350 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

புதுதில்லி; ஏமனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 350 பேர் பத்திரமாக தாயகம் திரும்பினர். ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹெளதி இனத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியிருக்கும் 4,000 இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களில் முதல் கட்டமாக ஏமன் தலைநகர் ஏடனில் சிக்கித் தவித்த 40 தமிழர்கள் உள்பட இந்தியர்கள் 350 பேர் இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா மூலம் மீட்கப்பட்டு, அதன் அண்டை நாடான ஜிபூட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானங்கள் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு 168 பேரும், மும்பைக்கு 190 பேரும் வந்துள்ளனர். மும்பைக்கு வந்த விமானம் அதிகாலை 3.25 மணியளவில் வந்தடைந்தது. மீட்கப்பட்ட இந்தியர்களிடம் ஆவண பரிசோதனையில் ஏற்பட்ட சிக்கல்களால் விமானம் சிறிது காலதாமதாகப் புறப்பட்டதாம். அவர்களை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். மீட்கப்பட்ட 350 பேரில், 206 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 40 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.