பல்கலைக்கழக மானியக் குழு – யுஜிசிக்கு பதிலாக புதிய அமைப்பு: மத்தியக் குழு பரிந்துரை

UGC புது தில்லி: நாட்டின் உயர்கல்வி விவகாரங்களில் பல்கலைக்கழக மானியக் குழு – யுஜிசியின் செயல்பாடுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக அதைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. இது, கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யுஜிசியை மறுசீரமைக்கும் நோக்கில் அதன் முன்னாள் தலைவர் டாக்டர் ஹரி கௌதம் தலைமையில் ஒரு குழுவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு, தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ஹரி கௌதம் அளித்த அறிக்கையில், [su_quote]யுஜிசியை மறுசீரமைக்கும் நடவடிக்கை வீண் முயற்சி. தற்போது இது தாற்காலிக அமைப்பாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. யுஜிசியில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஈடுபாடு இன்றி செயல்படுகின்றனர். அதன் செயல்திறன் கீழ்நோக்கிச் செல்கிறது. யுஜிசியின் மண்டல அலுவலகங்கள், கல்வி தொடர்பான கூட்டமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடும் தோல்வியடைந்துள்ளது. இவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகையும், மனித வள ஆற்றலும் வீணாகின்றன. மாநில அளவில் உள்ள அமைப்புகளை நேரில் ஆய்வு செய்வதிலும் யுஜிசியின் தலைமை ஆர்வம் காட்டுவதில்லை[/su_quote] என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமது பரிந்துரையில் ஆராய்ச்சி மாணவர்களைத் தேர்வு செய்ய தேசிய அளவில் ஆராய்ச்சி திறனறிவுத் தேர்வு நடத்துவது, யுஜிசி அமைப்புக்குப் பதிலாக நாடாளுமன்ற சட்டத்தின்படி “தேசிய உயர்கல்வி ஆணையம்’ அமைக்கலாம் என்று அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய செய்தி வெளியானதும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இச் செய்தியை மறுத்துள்ளது.