பாட்னா:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் இன்று பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ”பீகார் மக்களுக்காகப் பணியாற்றவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன். தேவையில்லாமல் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதாக பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. பிரதமர் ஆகும் திறமை எனக்கு இல்லை. மோடிக்கு அந்தத் திறன் இருந்ததால்தான் அவர் 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனார். 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் மக்கள்தான் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “நான் தொடர்ந்து தேவையில்லாமல் இலக்காக்கப்படுகின்றேன். எங்களுடையது ஒரு சிறிய கட்சி. நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. எங்களுடைய கட்சியின் தேசியத் தலைவர் ஆனால், நான் பிரதமர் பதவிக்கான போட்டியாளர் என்பது பொருள் இல்லை” என்றார்.
மேலும், “மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்ற நிதிஷ் குமார், என்னுடைய வாழ்க்கையில் எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, இப்போது முதல்-மந்திரியாக மக்களுக்காக பணியாற்றுகிறேன். இப்போது பீகாரில் மகா கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்து உள்ளனர், என்னுடைய பணியை நேர்மறையான முறையில் செய்து வருகின்றேன்” எனவும் கூறினார் நிதிஷ் குமார்.
பாரதீய ஜனதாவிற்கு எதிரான கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் பிரதமர் ஆகும் திறமை என்னிடம் கிடையாது என கூறினார் நிதிஷ்குமார்.