தலித் பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 5 செருப்படி: பஞ்சாயத்தில் தீர்ப்பு

ஹரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டம் பகவான்பூர் கிராமத்தில் தலித் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 5 செருப்படி மட்டும் வழங்கி கிராமப் பஞ்சாயத்து தீர்ப்பு அளித்துள்ளது. இந்தச் சம்பவம் மார்ச் மாதம் 25ல் நடந்துள்ளது. 19 வயது இளம் பெண் அருகில் உள்ள வயல்வெளிக்கு கால்நடை தீவனம் சேகரிக்கச் சென்றார். அப்போது 22 வயது இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் இது குறித்து கிராமத் தலைவரிடம் முறையிட்டுள்ளது. பின்னர் ரஞ்சித்பூர் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். கிராமக் கூட்டத்தை கூட்டிய தலைவர், பஞ்சாயத்துக் கூட்டத்தில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 5 செருப்படி வழங்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு வழங்கபட்டபோது இந்தப் புகாரை விசாரிக்க வந்த காவல்துறையினரும் அங்கே இருந்துள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த வேறு யாரும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. ஆனால், இந்த கட்டப்பஞ்சாயத்தில் தாங்கள் இருந்துள்ளதை போலீஸார் பின்னர் மறுத்தனர். ஆனால், இது குறித்து பஞ்சாயத்து தலைவர் மஹிபால் கூறிய போது:- இந்தப் பஞ்சாயத்துக் கூட்டம் கூட்டப்பட்டது பலாத்கார சம்பவத்துக்காக அல்ல. தகராறு குறித்து விசாரிப்பதற்காகத்தான். இது குறித்து காவல் துறையினர் முன்பு தீர்வு ஏற்பட்டுள்ளது என்றார்..