8 சத அகவிலைப்படி உயர்வு: போலி சுற்றறிக்கை கண்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

min-of-finance சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் நிதி அமைச்சக செலவு கணக்கு துறை சார்பு செயலாளர் பட்டாச்சார்யா பெயரில் 30–ந்தேதி ஒரு சுற்றறிக்கை வெளியானது. அதில் இந்த அகவிலைப் படி உயர்வு 1–1–2015 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்பார்த்ததை விட கூடுதலாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதே என தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் வியப்பும் அடைந்த நிலையில் அந்த சுற்றறிக்கை போலியானது என்று தெரிய வந்துள்ளது. அது போன்ற சுற்றறிக்கை செலவுக் கணக்குத் துறையால் அனுப்பப்படவில்லை என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செலவு கணக்கு துறை இயக்குனர் சுபாஷ்சந்த், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளுக்கு 1–ந்தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மார்ச் 30–ந்தேதியிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை போலியானது. அதன் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 107 சதவீத அக விலைப்படி உயர்வு பெறுகின்றனர். 1.1.2015 முதல் மேலும் 6 சதவீத டி.ஏ. வழங்கப்பட வேண்டும். வழக்கமாக ஜனவரி 1–ந்தேதி முதல் வழங்க வேண்டிய கூடுதல் டி.ஏ. ஏப்ரல் முதல் வாரத்தில் கிடைக்கும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த நிலையில், 30–ந்தேதி இந்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியானது. 6 சதவீதம் மட்டுமே டி.ஏ. உயர்வு வர வேண்டிய நேரத்தில் 8 சதவீத உயர்வு என அதில் கூறப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசின் பெயரில் போலி சுற்றறிக்கை அனுப்பி விஷம பரீட்சையில் யாரோ ஈடுப்பட்டுள்ளனர். இது அரசு நிர்வாகத்தில் உரிய பாதுகாப்பு இல்லாததை காட்டுகிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு உடனே களையப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்களே கூறுகின்றனர். இவ்வாறு போலி சுற்றறிக்கை மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.