பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: மோடி, அத்வானி ஒரே மேடையில்

modi-advani-amithshaபெங்களூரு: பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் மசோதாவினால் அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தக் கூட்டம் தொடங்கும் முன்னதாக, எதிர்க்கட்சிகள் செய்துவரும் மோசமான பிரசாரத்தை முறியடிக்க, இது குறித்த பிரசாரத்தை பெரிய அளவில் மேற்கொள்ளப் போவதாகக் கூறியது பாஜக. மேலும், இந்த மசோதாவில் விவசாயிகள் விரும்பும் திருத்தத்தை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், அதற்காக விவசாயிகளுடன் பேச அரசு அழைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாஜக பொதுச் செயலர் பி.முரளிதர் ராவ், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டில், நேற்றைய வதந்திகளை முறியடிக்கும் விதமாக எல்.கே.அத்வானி கலந்துகொண்டுள்ளார். மேலும், அவர் இன்று காலை, பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார். இந்த இரண்டு நாள் மாநாட்டில் 111 தேசிய செயற்குழு உறுபினர்களும் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஜனவரியில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வருகையை ஒட்டி, மோடி தன்னை அரசு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டதால், அந்தக் கூட்டம் ஒத்திப் போடப்பட்டு, இப்போது நடைபெறுகிறது. மேலும், தில்லி தேர்தலில் பாஜக அடி வாங்கிய பிறகு நடக்கும் கூட்டமும் இதுவே. எதிர்க்கட்சிகள் அதிகம் விமர்சனங்களை எழுப்பி, மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான் பிரசாரங்கள் பலமாகியுள்ள நிலையில் கூட்டப்பட்டுள்ள கூட்டமும் இதுவே. எனவே இந்த இரு நாட்கள் கூட்டத்தில், பாஜகவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அலசப்படும் என்று தெரிகிறது.