ஏழைகளுக்கு கடன் வழங்க பரிவு காட்டுமாறு வங்கிகளுக்கு மோடி அறிவுரை

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளுகு கடன் வழங்க பரிவு காட்டுமாறு வங்கிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்,ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதில் பரிவுடன் செயல்படுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு பொதுத் துறை வங்கிகளுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், பொருளாதார ரீதியிலான பல கடுமையான சவால்களை எதிர்கொண்டு, 80 ஆண்டுகளை ரிசர்வ் வங்கி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நாட்டின் பல்வேறு கட்ட வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இனிதான் அந்த வங்கிக்கு நிறைய பொறுப்புகள் காத்திருக்கின்றன. ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயராமல், நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியப்படாது. எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், பழங்குடியினர், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், கடன் சுமைகளால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு மிகுந்த வேதனைக்குரியது. அவற்றை வெறுமனே செய்திகளாக மட்டும் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது பொதுத் துறை வங்கிகளின் கடமை இல்லையா? என்று கேள்வி எழுப்பிய மோடி, விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் விதிமுறைகளைத் தளர்த்தி, மனிதாபிமான அடிப்படையில் கடன்களை வழங்க பொதுத் துறை வங்கிகள் முன்வர வேண்டும். அவற்றை திரும்ப வசூலிக்கும்போதும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். விரிவான நிதிக் கொள்கைகள்: எதிர்வரும் 2035-ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை ரிசர்வ் வங்கி கொண்டாடவுள்ளது. இந்த இடைப்பட்ட இருபது ஆண்டுகளுக்கான விரிவான நிதிக் கொள்கைகளை ரிசர்வ் வங்கி வகுக்க வேண்டும். அவை, அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா 2019-ஆம் ஆண்டிலும், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் 2022-ஆம் ஆண்டிலும், ரிசர்வ் வங்கியின் 90-ஆவது ஆண்டு விழா 2025-ஆம் ஆண்டிலும், நூற்றாண்டு விழா 2035-ஆம் ஆண்டிலும் கொண்டாடப்படவுள்ளது. குறிபிட்ட இந்த நிதிக் கொள்கைகளை வகுப்பதற்கு இந்த நான்கு ஆண்டுகளையும் அடையாள இலக்குகளாகக் கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும் என்றார் மோடி. https://youtu.be/n70PYmgm0Bo