பாஜக அலுவலகம் சூறை: காங்கிரஸார் கைது; பாஜக-காங். போட்டி மறியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய விவகாரத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட 8 பேரை புதுவை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காங்கிரஸாருக்கு போட்டியாக எதிர்ப்பு மறியலை பாஜகவினரும் அதற்கு எதிர்ப்பாக காங்கிரஸாரும் மறியல் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தியை மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்திருந்தார். அதனைக் கண்டித்து நாடு முழுவதும் சில இடங்களில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். புதுவையில் இளைஞர் காங்கிரசார் இந்திரா காந்தி சிலையிலிருந்து நேற்று மதியம் ஊர்வலமாக ரெட்டியார்பாளையம் ஜான்சி நகருக்குச் சென்று அங்குள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அழுகிய முட்டை, தக்காளியை வீசியும், கற்களை எடுத்து வீசியும் வன்முறையில் இறங்கினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பாஜக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி போர்க் களமானது. இதனிடையே பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் எஸ்பி அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வடக்கு எஸ்பி ரவிக்குமார் சமாதானப்படுத்தினார். பின்னர், பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், பொருட்களை சேதப்படுத்துதல், கல் வீசித் தாக்குதல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 7 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, நிர்வாகிகள் அசோக் ராஜா, பிரபு, கணேஷ், பரூக், சிவாஜி, வரதராஜ், சத்யா உள்பட 8 பேரை ஆட்டுப்பட்டி அருகே நேற்று நள்ளிரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் லாஸ்பேட்டை நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்து செல்லப்பட்டு மாஜிஸ்திரேட் விஜயகுமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, அவரது உத்தரவின் பேரில் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இளைஞர் காங்கிரஸார் பேரைக் கைது செய்ததைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலை அருகே நடந்த மறியலில் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வைத்தியலிங்கம், நாராயணசாமி உள்பட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் பங்கேற்றனர். முன்னதாக கிரிராஜ் சிங் உருவப் படத்தை அவர்கள் திடீரென எரித்தனர். இவ்வாறு பாஜகவும், காங்கிரஸும் போட்டியாக மேற்கொண்ட மறியல் போராட்டங்களால் புதுவையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.