புகையிலைப் பொருட்களை ஆதரித்துப் பேசிய பாஜக., எம்.பி.க்கள் நீக்கப்படலாம்!

பெங்களூரு: புகையிலைப் பொருட்கள் மற்றும் புகை பிடிப்பதை ஆதரித்துப் பேசிய பாஜக எம்.பி.கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிலிருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. புகையிலைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, வானொலி உரையிலும், வெளியிலும் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்துவரும் நிலையில், பாஜக எம்.பி.க்கள் சிலர் புகை பிடித்தலால் புற்று நோய் வராது என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புகை பிடிப்பதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த படம் சிகரெட் பாக்கெட்டுகளின் மீது தற்போது சிறிய அளவில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த எச்சரிக்கைப் படங்கள், சிகரெட் அட்டைகளில் 85 சதவீத அளவுக்கு பெரிதுபடுத்தப்பட்டு படங்கள் அச்சிடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதனிடையே சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் சட்டம் 2003 பற்றி மறு ஆய்வு செய்ய பாஜக எம்.பி. திலிப்காந்தி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் ‘‘புகை பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆய்விலும் உறுதி செய்யப்படவில்லை. வெளிநாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்துவிடக் கூடாது. எனவே இவ்வாறு 85% படத்தை பெரிதாக்கும் முடிவை ஒத்தி வைக்கலாம்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சரின் அறிவிப்பு ஏப். 1 ஆம் தேதி அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புகையிலைப் பொருட்கள் தயாரிப்பாளர்களின் நிர்பந்தம் காரணமாகவே இந்தக் குழு இவ்வாறு அறிக்கை அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளின் மீது உடல்நலக்கேடு தொடர்பான எச்சரிக்கையை வெளிப்படுத்தும் படத்தை பெரிய அளவில் வெளியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். மேலும் மக்கள் நலனுக்கு முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் எம்.பி.க்களை நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்கவும் மோடி உத்தரவிட்டுள்ளாராம்.