உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

panneerselvam-delhi
தில்லி விஞ்ஞான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டபோது…
  புதுதில்லி: உயர் நீதிமன்றம் உள்ளிட்ட தமிழக நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப் படவேண்டும் என்று தில்லியில் நடைபெறும் முதல்வர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். மேலும், எந்தத் தலையீடும் இன்றி நீதித்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் சார்பில் தில்லி விஞ்ஞான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த இந்த மாநாட்டில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, பொதுமக்களுக்கு விரைவானதும் சரியானதுமான நீதியை வழங்குவதையே நீதித்துறை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நீதித்துறைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தினால் மட்டுமே அதன் சுதந்திரத்தை உறுதி செய்ய முடியும். ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறபடி, தமிழக நீதிமன்றங்களில் தமிழை அங்கீகரித்து வழக்காடு மொழியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில அலுவல் மொழியை உயர் நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள் மற்றும் விசாரணைகளின்போது பயன்படுத்த அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளது. எனவே, தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்ற முந்தைய நிலைப்பாட்டை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி செயல்படும் தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்ய முக்கியத்துவம் அளித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் நீதித்துறைக்கென ரூ.809.7 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் கட்டடப் பணிகள், பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.375 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012-2013 ஆம் ஆண்டில் 178 நீதிபதிகளை தமிழக அரசு தேர்வு செய்து சிவில் நீதிமன்றங்களில் பணி அமர்த்தியுள்ளது. மேலும், 162 சிவில் நீதிபதிகளை நியமிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. துணை நீதிமன்றங்களுக்காக 35 நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தமிழக அரசு தேசிய நீதிமன்ற நிர்வாக அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதோடு, தேவையான உதவியாளர்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை உள்கட்டமைப்புக்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து வழங்கினால், 2017-ம் ஆண்டுக்குள் அனைத்து நீதிமன்றங்களும் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் நிலை ஏற்படும்… என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.