புனித வெள்ளியில் கூட்டம்: பிரதமரின் விருந்தைப் புறக்கணித்த உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன்

புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி நீதிபதிகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் குரியன் புறக்கணித்தார். கிறிஸ்துவர்கள் புனித நாட்களாகக் கருதும், புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரை இந்த நீதிபதிகள் மாநாடு நடத்தப் பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே நீதிபதி குரியன் விருந்தில் பங்கேற்க மறுத்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குரியன் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி, தான் விருந்தில் பங்கேற்க இயலாமல் போவதற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். அதே போல், தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், அந்த விருந்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்திருந்தார். அந்தக் கடிதத்தில், கிறிஸ்துவ மக்களின் விரத நாட்களான புனித வெள்ளி முதல் ஈஸ்டர் தினம் வரையில் மாநாடு நடத்துவது வேதனை அளிக்கிறது. மற்ற மதத்தினரின் தீபாவளி, தசரா, ஹோலி, ரம்ஜான் ஆகிய புனித நாட்களில் மாநாடு ஏதும் நடப்பதில்லை. இந்த விருந்தில் என்னால் கலந்து கொள்ள இயலாது என்று கடிதத்தில், விருந்தில் கலந்து கொள்ளாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கு எச்.எல்.தத்து எழுதிய பதில் கடிதத்தில், “நீதிமன்றத்தின் நலன் முக்கியமா, தனிநபர் நலன் முக்கியமா” என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பும் 2007, 2009-ஆம் ஆண்டுகளிலும் பொது விடுமுறை தினங்களிலும், புனித வெள்ளியிலும் மாநாடுகள் நடந்துள்ளன என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் இந்தப் பிரச்னை பெரிய அளவில் ஒரு விவாதப் பொருள் ஆகியிருந்தது.