ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா இடமாற்றம்: ஆம் ஆத்மி போராட்டம்

ashok-khemkaகர்காவ்ன்: அரியானாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஹரியானா மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டதுடன், முதல்வர் மனோகர் லால் கட்டாரின் உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராவ் மஹாவீர் சிங் சௌக்கில் கூடிய ஆம் ஆத்மி தொண்டர்கள், அரசுக்கு எதிராகவும் கட்டாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். மேலும், கெம்காவின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர். இது குறித்து ஆம் ஆத்மி கட்சி கூறியபோது, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இல்லாத போது, அப்போதைய காங்கிரஸ் அரசு அடிக்கடி கெம்காவை இடமாற்றம் செய்தபோது, விமர்சித்தது. இப்போது பாஜகவே அதைச் செய்கிறது என்று கூறினர். ஐ.ஐ.டி. காரக்புரில் பயின்ற அசோக் கெம்கா, அரியானாவின் நிகழ்ந்த சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவின் நிலபேர ஊழல் வழக்கை வெளிக் கொண்டு வந்தவர். இதனால் அவர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார். 24 வருடங்களில் 46 இடமாற்றங்களைச் சந்தித்தவர் அசோக் கெம்கா. கடந்த நவம்பரில் கட்டார், பாஜக சார்பில் புதிய அரசு அமைத்து முதல்வராகப் பொறுப்பேற்றபோது, அரியானா மாநில போக்குவரத்துத் துறை ஆணையர், மற்றும் செயலராகப் பதவியில் அமர்த்தப் பட்டார். இந்நிலையில் 6 மாதங்களுக்குள் அவர் ஏப்.1ம் தேதி முக்கியத்துவம் அதிகம் இல்லாத தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகத் துறையின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.