தில்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

புது தில்லி: தில்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 தாக்குதல் சம்பவங்கள் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது. இது தொடர்பாக உளவுத்துறை நடத்திய தீவிர விசாரணையில், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் இதேபோன்று தாக்குதல் நடத்த தில்லி நகரைக் குறி வைத்து சதித் திட்டம் தீட்டி இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைப்புகள் தில்லி போலீசாருக்கு அறிவுரைக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தில்லியில் தாக்குதல் நடத்த திட்ட தீட்டி இருப்பதாக தெரியவந்து இருக்கிறது. அண்மையில் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இது அமையக் கூடும். எனவே அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடாமல் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.