மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுகிறது!

moneyorderபுது தில்லி: பாரம்பரிய தந்தி சேவைக்கு மூடு விழா நடத்தப் பட்டது போல், 135 ஆண்டுகால மணி ஆர்டர் சேவைக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அஞ்சலகங்களில் நடைமுறையில் இருக்கும் மணி ஆர்டர் – பணவிடை அஞ்சல் அனுப்பும் முறை செல்வாக்கை இழந்து வருகிறது. கிராமங்களில் மட்டுமே இன்றும் ஓரளவு நடைமுறையில் இருக்கும் மணி ஆர்டர்களின் இடத்தை வெறு சில நவீன தொழில்நுட்பங்கள் பிடித்து விட்டன. கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் இன்றளவும் ஓரளவு பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும், மணி ஆர்டர் மூலம் அனுப்பப் படும் பணம் உரியவரைச் சென்று சேரும் கால அளவை விட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விரைவில் பணத்தை சேர்த்து விட முடியும் என்பதால், அதன் செல்வாக்கு இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டரை முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் நிலையங்களில் மணி ஆர்டர்கள் மூலம் பண விநியோகம் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர், தந்தி அனுப்பும் நடைமுறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக வழக்கத்தில் இருந்து மறைந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து தபால் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.