32 வயது பெண்ணை அறையில் 3 நாள் அடைத்து 5 பேர் கும்பல் பலாத்காரம்

rape-victim புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரை கர்காவ்னில் மூன்று நாட்களுக்கு ஒரு அறையில் அடைத்து வைத்து, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, பட்டினி போட்டுள்ளது. அந்த 5 பேர் கும்பலின் முக்கிய நபர் மீது ஏற்கெனவே ஒரு பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. போலீஸார் 5 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளது. குர்காவ்னில் உள்ள டிஎல்எப் 5வது ஃபேஸில் தங்கி வீட்டு வேலை செய்து வந்துள்ளார் ஒரு பெண். அவர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, அவரை ஒரு கும்பல் ஆட்டோ ரிக்சாவில் தூக்கிச் சென்று, வஸிராபாத் பகுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்தது. தலிப் என்ற பில்லு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணை அடித்து, நிர்வாணமாக்கி துன்புறுத்தியது. பின்னர், அந்தப் பெண்ணை 5 பேரும் 3 நாட்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடைத்து வைத்திருந்த அந்த 3 நாட்களும் அந்தப் பெண்ணுக்கு உணவு எதுவும் கொடுக்காமல் கண்டபடி தாக்கியுள்ளனர். இதில், அந்தப் பெண்ணின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடல் முழுதும் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில் வஸீராபாத் பகுதியில் செக்டார் 57ஐ ஒட்டிய பகுதியில் பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கே சென்று அறைக் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, பெண் ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்துள்ளார். அவரை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்தப் பெண்ணை அடைத்து வைத்து துன்புறுத்திய 5 பேரையும் கைது செய்தனர். கர்காவ்ன் ஏசிபி ராஜேஷ் குமார் இது குறித்துக் கூறியபோது, அந்தப் பெண்ணை அறையில் வைத்து, அறையை வெளியில் பூட்டியுள்ளனர். 24 மணி நேரமும் காவலுக்கு ஒருவர் இருந்து, அறையில் இருந்து அந்தப் பெண் வெளியேறிவிடாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். தலிப் அந்தப் பெண்ணுக்கு ரூ. 1 லட்சம் கொடுத்து அவரைத் தன்னுடன் வாழ்க்கை முழுவதும் இருக்குமாறு கேட்டுள்ளார் என்று ஒருவர் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தில் சிலர் கூறியபோது, அந்தப் பெண் அல்டாஃப் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அல்டாஃப் பணத்தை தர மறுத்துள்ளார். பின்னர் அல்டாஃப் அந்தப் பெண்ணை முறைகேடாக நடத்தி அவரை மிரட்டியுள்ளார். அதன் பிறகு அந்தப் பகுதியில் தாதா போன்று வலம் வந்த தலிப்பிடம் அந்தப் பெண்ணுக்கு தகுந்த பாடம் கற்பிக்குமாறு கூறியுள்ளார். அதன்பிறகே, தலிப் அந்தப் பெண்ணைக் கடத்தி பலாத்காரம் செய்து தாக்கியுள்ளார்… என்று கூறியுள்ளார் ஏசிபி குமார். இந்நிலையில் தலிப் உள்ளிட்ட 5 பேர் மீதும் சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.