புது தில்லி:
பாஜக., சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமநாத் கோவிந்த், எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோருவேன் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க திங்கள்கிழமை தில்லி சென்ற ராம்நாத் கோவிந்த், செய்தியாளர்களிடம் பேசியபோது, “குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருவேன். எனக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை பாஜக தலைமை அறிவித்த சில நிமிடங்களில் ராம்நாத் கோவிந்த் தில்லிக்கு விரைந்தார். பிரதமர் மோடியை சந்தித்து, நன்றி தெரிவித்த அவர், பின்னர் அமித் ஷாவின் இல்லத்துக்கும் சென்றார்.
சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்த ராம்நாத் கோவிந்த், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
அதன் பின்னர், ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சாமானிய மனிதனான நான் தற்போது மிகப் பெரிய பொறுப்புக்கு முன்னிறுத்தப் பட்டுள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் பிரதிநிதிகள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், என அனைவரையும் சந்தித்துப் பேசி, அனைவரிடமும் ஆதரவு கோரத் திட்டமிட்டுள்ளேன்.நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.