குளியலறையில் வழுக்கி விழுந்தார் ராகுல்? உருகுவே நாட்டில் சிகிச்சை!

rahul_gandhi காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குளியல் அறையில் வழுக்கி விழுந்து, அதற்காக உருகுவே நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் நீண்ட விடுப்பில் வெளிநாடு சென்றுள்ளார். அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு நீதிமன்றங்களில் மனு போட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டு, பின்னர் ராகுலைக் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போனது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்டது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காததால், மக்களிடம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு சரிவை சரி செய்யவும், கட்சியை மறுசீரமைக்கவும் கட்சித் தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில், கலந்துகொள்ளாமல் துணைத்தலைவர் ராகுல் காந்தி திடீரென நீண்ட விடுப்பில் சென்றார். அவர் எங்கே சென்றார்? எப்படிச் சென்றார் என்ற விவரத்தைத் தெரிவிக்காமல், மர்மமாகவே வைத்துள்ளது காங்கிரஸ் கட்சித் தலைமை. இதனிடையே ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விடுமுறையைக் கழிக்கச் சென்றதாக ஒரு தகவல் உலவியது. இல்லை இல்லை, அவர் சிகிச்சைக்குச் சென்றுள்ளார் என்று சில தகவல்கள்… வெளிநாட்டில் உள்ள தனக்கு விருப்பமானவரைச் சந்திப்பதற்காக அவர் சென்றுள்ளார் என்று சில தகவல்கள்…. மனைவியுடன் அவர் திரும்புவார் என்று சில வதந்திகள் என, ராகுல் குறித்த பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ராகுல் காந்தி குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அதில் படுகாயம் அடைந்து, அதற்கு சிகிச்சை பெற உருகுவே நாட்டுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தத் தகவலை ராகுல் காந்தியின் அலுவலக வட்டரங்கள் மறுத்துள்ளன.