பாஜக எதிர்ப்பால் பீகார் பேரவை முடங்கியது

பாட்னா: பீகார் சட்டப் பேரவையில் பாஜகவினரின் போராட்டத்தால் அவை முடங்கியது. திங்கள் கிழமை இன்று காலை அவை கூடியதும், பாஜகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதை அடுத்து, அவைத்தலைவர் பேரவையை ஒத்திவைக்கும் சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார் அவைத்தலைவர். பாஜக உறுபினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், வாயில் கறுப்பு துணிகளைக் கட்டி வந்தனர். தங்கள் குரலை ஒடுக்கும் முயற்சியை ஆளும் தரப்பு மேற்கொண்டு வருவதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் பாஜக உறுப்பினர்கள் தங்கள் மௌன விரதத்தை கடைபிடிப்பர் என்று தெரிவித்தார். இதை அடுத்து, அமைதியாக அனைத்து வாயில்கள், இருக்கைகளுக்குச் செல்லும் வழி, முதல்வர் இருக்கை செல்லும் வழி என அனைத்தின் முன்னும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் அவையில் இல்லை. அவர் தில்லியில் இருந்து இன்று மாலைதான் பாட்னா திரும்புகிறார்.