புது தில்லி:
பாஜக.,வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தன் ஆதரவை வாபஸ் பெற வேண்டும். அவர் மீரா குமாரை ஆதரிக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக, பாஜக., தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த அவரது தேர்வை வரவேற்ற பீகார் முதல்வர் நிதீஷ் குமார், அவரை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், நிதீஷ் குமாருடன் பீகாரில் கூட்டணியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமாரின் முடிவை கடுமையாக விமர்சித்ததுடன், அவரது முடிவுக்குக் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவித்துள்ள மீரா குமாரை நிதீஷ் குமார் ஆதரிக்க வேண்டும் என்று நிதீஷிடம் கேட்டுக் கொண்டுள்ள லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமாரிடம் இது குறித்து நேரில் பேசுவேன். அவசரப்பட்டு நிதீஷ் குமார் பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரித்துவிட்டார். இந்தத் தவறான முடிவுக்கான பலனை நிதிஷ் அனுபவிப்பார் என்று லாலு சாபம் கொடுத்துள்ளார்.
ராம்நாத்தை ஆதரித்து ஒரு வரலாற்றுப் பிழை செய்த நிதீஷ் குமாரை மன்னிக்க மாட்டார்கள் என்று பொருமித் தள்ளியுள்ளார் லாலு.