ஏமனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு

புது தில்லி: போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து இந்தியர்கள் மற்றும் இந்தியர் அல்லாதார் என பலரை மீட்டுக் கொண்டு வந்த, இந்திய அதிகாரிகளின் தடையற்ற பணிக்காக மனந்திறந்து பாராட்டுவதாகக் கூறினார் பிரதமர் மோடி. தனது டிவிட்டர் பதிவுகளில், அவர் அடிக்கடி இந்த விவரங்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, மற்றவர்கள் மனங்கலங்கி தவித்து நிற்கும்போது, இந்தியர்களின் தியாகமும் உதவியும் உடனே அவர்களை ஆபத்தில் இருந்து காக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும், இந்திய வெளியுறவுத் துறை, கடற்படை, விமானப் படை, ஏர் இந்தியா, கப்பல் போக்குவரத்து, ரயில்வேத் துறை, மீட்புப் பணியில் உடனே கைகோத்த மாநில அரசுகள் இவற்றுக்கிடையே உள்ள உடனடி ஒருங்கிணைப்புத் திறனையும் செயல்பாடுகளையும் பாராட்டியுள்ளார் மோடி. இந்த ஆபரேஷனில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் ராணுவத் தளபதியும் வெளியுறவு இணை அமைச்சருமான வி.கே.சிங் ஆகியோரின் துடிப்பான செயல்பாடுகள் தனித்துவம் வாய்ந்ததாக் இருந்தது என்றும், தம்மைக் கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் மோடி. ஏமனில் இருந்து சுமார் 2300 பேர் வரை ஞாயிற்றுக்கிழமை வரையில் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.