பவுர்ணமியில் பவர்கட்; ஞாயிறுகளில் சைக்கிள்: சுற்றுச்சூழல் மாநாட்டில் மோடி

modi-environment-meeting புது தில்லி: தில்லியில் இன்று மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், “சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரச்னை குறித்து உலகமே கவலை கொண்டு பேசுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு அக்கறை இல்லை எனும் விதமாக உலக நாடுகள் நம்மைப் பற்றி நினைக்கின்றன. ஆனால், இயற்கையைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இந்தியாவை யாரும் கேள்வி கேட்கவே முடியாது. காரணம், இயற்கையை உலக நாடுகள் மாசு படுத்தும் போது, அதில், இந்தியாவின் பங்களிப்பு மிகமிகக் குறைவுதான். இந்திய கலாசாரத்தில் மட்டும்தான் சுற்றுச்சூழல் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கார்பன் கசடுகளை வெளியேற்றுவதில் இந்தியாவுக்கு எப்போதுமே கடைசி இடம்தான். பூமி வெப்பமயமாவதை தடுப்பது எப்படி என்று உலக நாடுகளுக்குத் தெரியவில்லை. கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே பூமி வெப்பமயமாதலை தடுக்க முடியும் என நினைக்கின்றனர். இதற்கு வேறு வழியும் இருக்கிறது. நாம் நம் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டாலும், பூமி வெப்பமயமாதலை தடுக்க முடியும். மனிதனின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வராத வரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமல்ல. முன்பெல்லாம் கிராமங்களில் ஒரு வழக்கம் இருந்தது. பௌர்ணமி தினத்தன்று சிறு பிள்ளைகளை நிலவு ஒளியில் ஊசியில் நூல் கோக்குமாறு பாட்டிகள் சொல்வார்கள். குழந்தைகளும் அதை ஆர்வத்துடன் செய்வர். நாமும், முழுநிலவு நாளன்று மின் விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி எடுக்கலாம். இதை நான் கூறியதற்காக மேலைநாட்டவர் என்னைப் பார்த்து சிரிக்கக்கூடும். அதே போல், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிளை மட்டுமே நாம் பயன்படுத்தலாம். அப்படிச் சொல்வதால், நான் ஒரு சைக்கிள் கம்பெனியின் ஏஜென்டாக செயல்படுவதாக என்னைக் கேலி செய்யலாம். சுற்றுச்சூழலைப் பேணியபடியே வளர்ச்சியை நோக்கி முன்னேறுவது சாத்தியமற்றது என்ற வாதத்தை சிலர் முன்வைக்கலாம். ஆனால், அதை நான் மறுக்கிறேன். வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றாகவே இருக்க முடியும். நகராட்சி அமைப்புகள் திடக் கழிவு மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அணு சக்தியை பயன்படுத்துவதில் சுற்றுச்சூழலைப் பேண வேண்டும். ஆனால், நாம் இயற்கையைப் பேணுவதில்லை என விமர்சிக்கும் மேலை நாடுகள்தான், நமக்கு அணு சக்தியில் உதவ மறுத்து இரட்டை வேடம் போடுகின்றன” என்று பேசினார் மோடி.