பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணை கேட்டு மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்தன. மாநில போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சிபிஐ விசாரிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டு கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த வழக்கை 3 மாத காலக் கெடுவுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது கர்நாடக மாநில அரசு. ஆனால், சிபிஐக்கு எந்த மாநில அரசும் இவ்வாறு காலக்கெடுவெல்லாம் விதிக்கமுடியாது என்று சிபிஐ, ஒரு கடிதம் அனுப்பியது. அதில், இவ்வாறு காலக் கெடு விதித்தால் தங்களால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும், இந்த வழக்கை விசாரிக்கப் போவதில்லை என்றும் கூறி மறுப்பு தெரிவித்தது. தங்கள் தவறை தாமதமாக உணர்ந்த கர்நாடக அரசு, இப்போது காலக்கெடு இல்லாமல், வழக்கமான பரிந்துரையாக ஒரு அறிவிப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த ஒரு சிறிய விஷயம் கூடத் தெரியாமல் கர்நாடக மாநில அரசு சிபிஐக்கு கடிதம் அனுப்பியிருக்குமா, அப்படியென்றால் கர்நாடக அரசில் யாரோ வேண்டுமென்றே இத்தகைய தவறை உள்நோக்கத்துடன் செய்திருப்பாரோ என்ற பரபரப்புப் பேச்சும் அங்கே இல்லாமலில்லை!
Popular Categories