Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஜூன் 21 – சூரிய கிரகணம்! சூடாமணி நாம கிரகணம்!

ஜூன் 21 – சூரிய கிரகணம்! சூடாமணி நாம கிரகணம்!

solar eclipse
solar eclipse

ஜூன் 21 சூரிய கிரகணம். சூடாமணி நாம கிரகணம்.

ஸ்ரீ ஆதித்யாய நமஹ.

சூரிய கிரகணம் மிகவும் பவித்திரமான பண்டிகை நேரமாக கணக்கிடப்படுகிறது. சனாதனமான காலத்திலிருந்தே இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகவதத்தில் சூரிய கிரகண நேரத்தில் கிருஷ்ண பரமாத்மா யாதவர்கள் அனைவரோடும் சேர்ந்து பிரபாச தீர்த்தத்திற்கு சென்று சமுத்திர ஸ்நானம் செய்தார். அதே இடத்திற்கு அந்த நேரத்தில் நந்தகோபன் முதலான கோபர்கள் வந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள் என்ற காட்சியை வியாசர் சிறப்பாக வர்ணிக்கிறார்.

சூரியகிரகணம், சந்திரகிரகணம் இவை நிகழும்போது சமுத்திர ஸ்நானம், நதி ஸ்நானம், இவை இயலாதபோது வீட்டிலேயே ஸ்நானம் செய்வது கடமையாக விதிக்கப்பட்டுள்ளது.

கிரஹணம் பிடித்தது முதல் விடுவது வரை ஜபமும் தியானமும் தானமும் செய்ய வேண்டும். கிரகண காலம் ஆன்மீக சாதனைகான நல்ல வாய்ப்பு. அச்சம் கொள்வதற்கான நேரம் அல்ல. பவித்திரமான நேரம். சாதககர்ளுக்கான பண்டிகை காலம். ஏனென்றால் அவரவருக்கு அளிக்கப்பட்ட உபதேச மந்திரங்களை கிரகண நேரத்தில் ஜபம் செய்வதால் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக ஆகின்றது.

மந்திர அனுஷ்டானத்திற்கு சிறப்பான காலம் சூரிய கிரகணம். அப்போது செய்யும் நாமஸ்மரணை, ஜபம், தியானம், தானம்… இவை பல மடங்கு பலன் அளிக்கும். சிலர் அர்ச்சனை செய்யலாம் என்று கூறுவதுண்டு. ஆனால் கிரகணம் பிடித்திருக்கும் போது பூஜைகள் செய்வதில்லை. கிரகணம் விட்ட பின் ஸ்நானம், சுத்தி செய்வது எல்லாம் முடிந்த பின்னர்தான் அர்ச்சனை போன்றவை செய்வது வழக்கம்.

*கிரகண காலத்தில் ஸ்நானம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தெலுங்கு பாகவதம் எழுதிய கவி பம்மெர போத்தனா ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். போத்தனா கிரகணத்தின்போது கோதாவரி நதி தீரத்தில் சிவபெருமானை உத்தேசித்து தியானத்தில் ஆழ்ந்திருந்த போது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் கிடைத்தது. பஞ்சாக்ஷரீ மந்திர ஜபம் செய்த போது ஸ்ரீராஜாராமர் தரிசனமளித்து பாகவதத்தை தெலுங்கில் எழுதும்படி பணித்தார்.

கிரகண காலத்தில் தெய்வ சக்திகள் நம் மேல் கருணைகொண்டு உடனடியாக பலன் அளிக்கின்றன. சாதாரண நாட்களில் செய்யும் ஆன்மிக சாதனைகளை விட கிரகணத்தின்போது செய்யும் சாதனைகள் மிகச் சிறப்பானவையாக மாறிய அதிக எண்ணிக்கையில் செய்த சாதனையாகிறது.

கிரகணத்தின் போது அனைவரும் தெய்வசக்தியை நிரப்பிக் கொள்வதற்கு முனைய வேண்டும். அதற்கான சிறந்த வாய்ப்பாக கிரகணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தெய்வசக்தியை பிரார்த்திக்கும் போது இயல்பாகவே கிரக தோஷங்கள் விலகுகின்றன.

சிலர் வீணாக காலம் கழிப்பார்கள். கிரகணத்தின் போது சாப்பிட்டால் என்ன? காபி குடித்தால் என்னவாகும்? என்றெல்லாம் சர்ச்சையில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற வீண் செயல்களின் விளைவுகள் உடனடியாக பலன் அளிக்காவிட்டாலும்… செடி நட்ட உடனே பழம் கிடைக்காது போல… உடனே பிரத்யக்ஷமாக பலன் தென்படாவிட்டாலும் சிறிது சிறிதாக அதன் விளைவுகள் தெரியவரும்.

கிரகணத்தின் போது செய்ய கூடாதவற்றைச் செய்தால் தீய பலன்கள் விளையும்.

கிரகணத்தின் போது கடைபிடிக்கவேண்டிய பிரத்தியேக நியமங்கள் உள்ளன. கிரகணத்தின்போது உறங்கக்கூடாது. உண்ணக்கூடாது.
கிரகணம் பிடிப்பதற்கு சில மணிநேரம் முன்பிருந்தே ஆகாரம் எதுவும் உண்ணக்கூடாது. ஏனென்றால் கிரகண சக்தி சூட்சுமமாக நம்மில் ஜீரண சக்தியில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது. அதனால் வயிறு காலியாக வைத்துக் கொள்வது நல்லது. ஆயினும் சிலருக்கு விலக்கு கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் சனாதன தர்மம் பிடிவாதமாக அனைவருக்கும் ஒரே நியமத்தை புகுத்துவதில்லை. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்… கிரகணத்திற்கு முன் ஏதாவது உணவு ஏற்கலாம். பின் கிரகண காலத்தில் ஆன்மீக சாதனை செய்யலாம்.

  • பித்ரு தற்பணம் கூட கிரகணத்தின் போது முக்கியமானது. அதன் மூலம் பித்ரு தேவதைகளுக்கு அட்சயமான பலன் சென்றடைகிறது. கிரகணம் பிடித்த உடனே ஸ்நானம் செய்துவிட்டு பித்ரு தர்ப்பணம் செய்யலாம். அல்லது கிரகணம் விடுவதற்கு சற்றுமுன் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.

*தானம் செய்வதும் கிரகண விதிகளில் ஒன்று. யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். எந்த நட்சத்திரத்தில் எந்த ராசியில் பிடிக்கிறதோ அவர்கள்தான் தானம் செய்ய வேண்டும் என்பது அன்றி கிரகணத்தின் போது அனைவரும் தானம் செய்ய வேண்டும். ஒருவேளை கிரகணத்தின் போது தானம் பெறுபவர் கிடைக்காவிட்டால் கிரகணம் விட்ட பின் ஸ்நானம் செய்து, பின் தானம் அளிப்பது சிறந்தது. முடிந்தவரையில் விரைவில் கொடுக்க வேண்டும்.

எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் கிரகணம் பிடிக்கிறது, அதற்கான பிராயச்சித்தம் என்ன என்பதை ஜோதிட சாஸ்திர நிபுணர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஜோதிட அறிவியலுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதற்கு ஏற்ப தானம் கொடுத்து கிரகண சாந்தி செய்து கொள்ளலாம்.

இவ்விதமாக கிரகணத்தை ஒரு பயங்கரமானதாகவோ பீடை காலமாகவோ எண்ணாமல் இதனை ஒரு அருள்புரியும் நேரமாக உணரவேண்டும்.

கிரகணத்தின்போது தெய்வசக்தியை பெறுவதற்கு இறைவன் அளித்த வாய்ப்பாக எண்ண வேண்டும்.

இதனை மூடநம்பிக்கையாக நினைக்காமல் நன்கு பயன்படுத்திக்கொண்டு உய்வடைய வேண்டும்.

ஒவ்வொரு மனிதனிலும் இறை சக்தி நிரம்பி உள்ளது. ஆனால் அது மறைந்து உள்ளது. அதனை ஆன்மிக சாதனை மூலம் தூண்டி ஒளியூட்டிக் கொள்ள வேண்டும். அதற்கான அனுகூலமான நேரமே கிரகணம்.

எனவே பண்டிகைகளில் ஒன்றாக கிரகணமும் கணக்கிடப்படுகிறது.

இந்த முறை வருவது சூடாமணி நாம கிரகணம். அதிக நேரம் இருக்கக் கூடியது. இதற்கு சிறப்பான பலன்கள் உள்ளன.

எனவே தெய்வ சக்தியையும் அருளையும் பெறும் வாய்ப்பை நழுவ விடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்வோம்!

தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version