ஏமனில் இருந்து நாடு திரும்பிய மேலும் 452 இந்தியர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்

மும்பை: ஏமனில் சிக்கியிருந்த மேலும் 452 இந்தியர்கள் நேற்று மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, அங்கே பணியாற்றி வரும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவ்வாறு அங்கே சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேசன் ரஹத்’ என்ற பெயரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. இதுவரை இந்திய கடற்படை, விமானப் படையினர் சேர்ந்து இருந்து 2,300 இந்தியர்கள் மற்றும் 176 வெளிநாட்டினரை பத்திரமாக மீட்டு வந்துள்ளனர். மேலும் 1,000–க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக இந்தியா வந்து இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏமன் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 225 இந்தியர்கள் ஜிபோட்டியில் இருந்து இரவு 10.40 மணி அளவில் சி–17 குளோப் மாஸ்டர் விமானத்தில் மும்பை வந்தடைந்தனர். மேலும் 227 பேர் நள்ளிரவில் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் 452 பேரும் ரயில் மற்றும் விமானம் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றடைந்தனர்.