திருப்பதி: செம்மரம் வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திராவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தமிழக – ஆந்திர எல்லையில் செம்மரங்கள் வெட்டிக் கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செம்மரக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்டபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தும் கும்பலுக்கும், ஆந்திர வனத்துறை, போலீசாருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், இந்த மோதல் இன்று உச்சக் கட்டத்துக்குச் சென்றுள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதியான ஈசகுண்டா, சீனிவாசமங்காபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆந்திர போலீசாருக்குத் தகவல் கிடைத்ததது. இதை அடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கே கடத்தல் கும்பலை போலீசார் எச்சரித்துப் பிடிக்கச் சென்றபோது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Popular Categories