
- தென்னிந்தியக் காடுகளில் ஐ.எஸ். அமைப்பின் மையம் செயல்பட ஏற்பாடு!
- ஆயுதங்கள், வெடிபொருட்களை கொள்முதல் செய்தது அம்பலம்
- பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
தென்னிந்தியக் காடுகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மையம் தொடங்க ஏற்பாடுகள் செய்து, அதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கொள்முதல் செய்ததாக தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மண்ணூர்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 47) கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். எனவே இந்தப் படுகொலை மத அடிப்படைவாதிகளால் செய்யப் பட்டது என்பதை உளவுப் பிரிவு போலீஸார் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கடலூரைச் சேர்ந்த காஜாமொய்தீன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. எனவே, இந்த வழக்கு க்யூ ப்ராஞ்சுக்கு மாற்றப் பட்டது.
கியு பிரிவு போலீஸார் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதச் செயல்களுக்காக ஆட்களைத் திரட்டவும், ஆயுதங்கள் வாங்கவும் மோசடியாக சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். அதன் முதல்படியாக, இந்து தலைவர்களை வரிசையாகக் கொலை செய்ய திட்டமும் தீட்டியுள்ளனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் விவரங்கள் போலீஸாருக்கு தெரியவந்தது.
இதை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் (37), சென்னையை சேர்ந்த ராஜேஷ் (34), சேலத்தை சேர்ந்த அன்பரசன் (27) மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்த அப்துல் ரகுமான் (44), லியாகத் அலி (29), பெங்களூருவைச் சேர்ந்த முகமது ஹனீப் கான் (29), இம்ரான் கான் (32), எஜாஸ்பாஷா (46), உசைன் ஷெரீப் (33), மகபூப் பாஷா (48) என 12 பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதை அடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை – என்ஐஏ.,வுக்கு மாறியது. அதன் பின்னர், இந்த 12 பேர் மீதும் சிம்கார்டுகள் மோசடி மற்றும் கொள்முதல் செய்த வழக்கில் என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கலானது.
என்.ஐ.ஏ.,வின் இந்தக் குற்றப் பத்திரிகையில், இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் சார்பு பயங்கரவாத அமைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் பயங்கரவாதி லியாகத் அலியுடன் சேர்ந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் மற்றும் சென்னையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் ஏராளமான சிம் கார்டுகளை கொள்முதல் செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அன்பரசன் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மூலம் கடந்த 2019 செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இடையில் பயங்கரவாதி காஜாமொய்தீன் மற்றும் மகபூப் பாஷா ஆகியோருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்க உதவி செய்துள்ளனர்.
உலக அளவில் பயங்கரவாத அமைப்பின் சார்பாக வன்முறை ஜிஹாத் நடத்தும் நோக்கில் தென்னிந்தியாவில் உள்ள காடுகளில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் டெய்ஷ் பயங்ரவாத அமைப்பின் மையத்தை நிறுவுவதற்கான நோக்கில் தொடர்ந்து காடுகளில் முகாம் அமைத்து ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளனர்.
சென்னை மற்றும் சேலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட சிம்கார்டுகளை பயங்கரவாதி காஜா மொய்தீனுக்கு கொடுத்துள்ளனர். அவன் அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள தனது சக பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத கூட்டாளிகளை தொடர்பு கொள்ள பயன்படுத்தி உள்ளான்.. என்று என்ஐஏ அந்தக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக, கேரளம் மற்றும் கேரளத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களை இஸ்லாமிய மயமாக்கும் வேலைகளில் ஐ.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன.
அதேநேரம், நேரடியான பெயர்களில் இல்லாமல், அரசியல் கட்சி பெயரிலும், ஆட்டோ தொழிற்சங்கங்கள், சமூக உதவி புரியும் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் உளவு அமைப்புகளால் முன்வைக்கப் பட்டுள்ளன.