புது தில்லி: தனது இலங்கைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்னை குறித்து அவர்களுடன் விவாதித்தார் என்று அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகள் பயணம் குறித்து மக்களவையில் தாமாக முன்வந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சில தகவல்களைக் கூறினார். அப்போது, பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையை எழுப்பிய மோடி, “இது இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமானம் தொடர்புடைய சிக்கலான பிரச்னை. எனவே இதற்கு இருநாடுகளும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தப் பிரச்னை தொடர்பாக இரு நாட்டு மீனவ சங்கங்களும் உடனடியாக சந்தித்து இருதரப்புக்கும் ஏற்ற உடன்பாட்டை செய்துகொள்ள முன்வர வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும், இலங்கைத் தமிழர் உட்பட அனைத்து இன மக்களின் மேம்பாட்டுக்காகவும், சமத்துவ வாழ்க்கை, சம நீதி, அமைதி ஆகியவற்றை நிலைநாட்டும் இலங்கை அரசின் முயற்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும். தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13-வது சட்டத் திருத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் மோடி கூறினார் என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari