புது தில்லி:
ரோஹிங்யா அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்னே மாகாணத்தில் சிறுபான்மை சமூகத்தினராக ரோஹிங்யா இன முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான அளவில் வசித்து வரும் இவர்களில் சிலர், கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதம் தாங்கிய போராட்டங்களினால், மியான்மரில் பயங்கரவாதம் தலையெடுக்கச் செய்தனர். இதனால், உள்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த ரோஹிங்யா இன மக்களின் மீதும் அதிருப்தி அடைந்தனர்.
இதை அடுத்து, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சிலர்தான் என்றாலும், ஒட்டு மொத்த ரோஹிங்யா இன மக்கள் மீதும் ராணுவம் வன்முறைத் தக்குதலை கட்டவிழ்த்து விட்டது. ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு தப்பிச்சென்ற வண்ணம் உள்ளனர். இந்தியாவிலும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருக்கின்றனர். ஆனால், ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தங்களை நாடு கடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, மொகம்மது சலிமுல்லா, மொகம்மது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. திங்கள்கிழமை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரோஹிங்யா அகதிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்யா அகதிகள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தொடர்ந்து தங்கி வருகின்றனர். இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். அகதிகளை வெளியேற்றுவது என்பது கொள்கை முடிவு. இதில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இதை அடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.