Home இந்தியா ஆகஸ்ட் 29: இன்று தெலுங்கு மொழி தினம்!

ஆகஸ்ட் 29: இன்று தெலுங்கு மொழி தினம்!

telugu-language-day
telugu language day

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29 அன்று கிடுகு வெங்கட ராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு மொழி தினமாக உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது.

கிடுகு வெங்கட ராமமூர்த்தி தெலுங்கு ‘பேச்சு மொழியின் பிதாமகர்’ என்று போற்றப்படுகிறார். இவருக்கு ‘அபினவ வாகமசாசனுடு’ என்ற விருது உள்ளது.

ஒரு காலத்தில் சாமானியக்கு எட்டாத உயரத்தில் இருந்த தெலுங்கு பண்டித மொழியை பூமியில் இறக்கி தெலுங்கு மொழி இலக்கியத்தை அனைவருக்கும் அருகாமையில் இருக்கச் செய்த பெருமை கிடுகு ராமமூர்த்தி பந்துலு அவர்களையே சாரும்.

அவருடைய பிறந்தநாள் தெலுங்கு மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மொழிக்காக அவர் நடத்திய அயராத போராட்டத்தை நினைவு கூரும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஆந்திரபிரதேஷ் அரசால் நடத்தப்படுகின்றன.

தெலங்காணா மாநிலம் தனியாகப் பிரிந்த பின்னர் ‘தெலங்காணா தெலுகு மொழி’ தினத்தை செப்டம்பர் 9 அன்று கவிஞர் கலோஜி நாராயண ராவ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடுகிறது.

வெண்ணையை விட மிருதுவான தெலுங்கு மொழி நிகழ்காலத்தில் இளைய தலைமுறையினரால் புறக்கணிக்கப்படுவது குறித்து அறிஞர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தெலுங்கு மொழியின் ஒளி கருகாமல் காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தெலுகு மொழி அபிமானிக்கும் உள்ளது என்று அவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

தெலுங்கு மொழிக்கு பட்டாபிஷேகம் செய்து வைபவத்தோடும் ஆதிக்கத்தோடும் ஒளி வீசச் செய்ய வேண்டும் என்று மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்விக்கூடங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுசேர்ந்து தெலுங்கு பாஷை தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

கொரோனா தொற்று பரவிவரும் தற்சமயத்தில் ஆன்லைன் காணொலிக் காட்சிகள் மூலம் மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் மொழி குறித்த விழிப்பும் புரிதலும் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் படுகின்றன.

கவி வேமனா செய்யுள், சுமதி சதகம் போன்ற கவிதைகளை ஒப்புவித்தல், கவிதை கட்டுரை நாடகம் பேச்சுப் போட்டிகள் நடத்துவது போன்றவற்றை ஏற்பாடு செய்து மாணவர்களிடையே தெலுங்கு மொழி மீது ஆர்வம் ஏற்படுத்தி உற்சாகப்படுத்தி வருகிறது அரசு.

தெலுங்கு மொழியில் இருபதாம் நூற்றாண்டுக்கு முன் வரை மரபிலக்கணத்தினை ஆதாரமாகக் கொண்ட செய்யுள் மொழி, இலக்கியங்களுக்கு பயன்பட்டு வந்தது. காலத்தையொட்டி மாற்றங்கள் பெறாமல் பெட்டியில் வைத்து பூட்டிய ஆபரணம் போல் காப்பற்றப்பட்டு வந்தது.

telugu language day1

தெலுங்கு வசனங்களை சாதாரண பிரஜைகளிடம் எடுத்து வந்து பேச்சு மொழியின் அழகை விளக்கிக் கூறிய மகனீயர் கிடுகு வேங்கட இராமமூர்த்தி அவர்கள். ஸ்ரீகாகுளம் நகரின் வடக்கே 20 மைல் தூரத்தில் ஸ்ரீமுகலிங்க க்ஷேத்திரம் உள்ளது. அதன் அருகில் உள்ள ‘பர்வதாலபேட்டை’ என்ற கிராமத்தில் 1863 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 அன்று ராமமூர்த்தி பிறந்தார். தந்தையார் கிடுகு வீரராஜு. தாயார் வேங்கடம்மா. 1875 வரை ஆரம்பக்கல்வி அங்கேயே பயின்றார்.

பின் தந்தையாரின் மரணத்திற்குப் பிறகு விஜயநகரத்தில் தன் மாமாவின் வீட்டில் தங்கி மகாராஜா ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்து 1880 வரை படித்தார். அங்கேயே பள்ளி ஆசிரியராக வேலை பார்த்த சந்தர்ப்பத்தில்தான் கிடுகு ராமமூர்த்தியும் குரஜாட அப்பாராவும் நண்பர்களானார்கள்.
அந்த நட்பு தெலுங்கு மொழிக்கு வரமாக அமைந்தது.

கிடுகு ராமமூர்த்தி காட்டுவாசிகளின் மொழியைக் கற்று அவர்களுக்கு கல்வி கற்பிக்க விரும்பினார். தெலுங்கு மொழியும் வன மொழியும் அறிந்த ஒருவரை தன் வீட்டிலேயே தங்க வைத்து வன மொழியை கற்றறிந்தார்.

சொந்தப் பணத்தைச் செலவழித்து வனத்தில் பள்ளிக்கூடங்களை அமைத்தார். சம்பளம் கொடுத்து வனவாசி பிள்ளைகளுக்கு அவர்கள் மொழியிலேயே கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். அப்போதைய மதராஸ் அரசு அவருடைய முயற்சியைப் பாராட்டி 1913 ல் ராவ்பகதூர் விருது கொடுத்து கௌரவித்தது.

பின்னர் 1931 ல் ஆங்கிலத்தில் வன மொழிக்கான இலக்கணத்தையும் 1936 ல் ஆங்கில-வனமொழி அகராதியையும் தயாரித்தார். மதரஸ் அரசாங்கம் அவ்விரண்டையும் அச்சேற்றியது. 1934ல் அரசாங்கம் ராமமூர்த்திக்கு தங்கப் பதக்கம் அளித்து கௌரவித்தது.

1940 ஜனவரி 15ல் ‘பிரஜா மித்ரன்’ அலுவலகத்தில் பத்திரிகை ஆசிரியர்களோடு உரையாடுகையில் அரசாங்க கல்வித்துறையும் பல்கலைக்கழகங்களும் செய்யுள் மரபு மொழியை விடாமல் இன்னும் பற்றிக் கொண்டிருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். அதே ஆண்டு ஜனவரி 22 ம் நாள் கிடுகு ராமமூர்த்தி மறைந்தார்.

“தேச பாஷலந்து தெலுகு லெஸ்ஸ…!” – பாரத தேச மொழிகளிலேயே தெலுங்கு மொழி அழகானது என்றார் ஸ்ரீகிருஷ்ண தேவராயர். ‘சுந்தர தெலுங்கு’ என்று வர்ணித்தார் பாரதியார். வேறு எந்த மொழியிலும் இல்லாத அக்ஷரங்களும், ‘அவதானம்’ என்னும் சிறப்பான இலக்கிய செயல்முறையும் தெலுங்கு மொழிக்கு உள்ள தனிச் சிறப்புகள்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -62

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version